சுப்ரமணியன் அங்கிளை போல அன்பும் அக்கறையும் கொண்டவரை பார்க்க முடியாது.. விக்ரம் இரங்கல்
சென்னை : நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் இன்று காலை மரணமடைந்தார். அவரது மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நேரில் சென்று நடிகர் அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் விக்ரம் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நடிகர் அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அஜித் தந்தை சுப்ரமணியன் மரணம்
நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் இன்று காலை மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து அஜித் மற்றும் குடும்பத்தினர் துயருற்ற நிலையில், அவருக்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலினும் அஜித் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் சென்னை திரும்பிய விஜய்யும் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

விஜய் நேரில் ஆறுதல்
அஜித்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய், அங்கு 15 நிமிடங்களுக்கும் மேல் இருந்துள்ளார். மேலும் அவர் அஜித் வீட்டிற்கு காரில் வந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அஜித் -விஜய் இணைந்துள்ள புகைப்படங்களையும் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். அவர்களின் ரசிகர்கள்தான் அவ்வப்போது பகைமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் எப்போதும் நட்புடன்தான் உள்ளனர் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக உள்ளது.

நடிகர் கமல் அஞ்சலி
இதனிடையே, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமும் அஜித் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் அஜித் தந்தை மரணத்தையொட்டி அஞ்சலி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதனிடையே கதறி அழுத தன்னுடைய தாயை தேற்ற வழி தெரியாமல் அஜித்தும் கண்கலங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

நடிகர் விக்ரம் இரங்கல்
இதனிடையே நடிகர் விக்ரமும் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் மறைவிற்கு தனது இரங்கலை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்துள்ளார். தற்போது தங்கலான் சூட்டிங்கிற்காக கேஜிஃஎப்பில் உள்ளார் விக்ரம். இவர்கள் இருவரும் முன்னதாக உல்லாசம் உள்ளிட்ட படங்களில நடித்துள்ள நிலையில், இருவருக்குமே சிறப்பான நட்பு காணப்படுகிறது. இந்நிலையில் அஜித் தந்தை மறைவிற்கு தன்னுடைய இரங்கலை ட்விட்டர் மூலம் விக்ரம் தெரிவித்துள்ளார்.

ஈடு செய்ய முடியாத இழப்பு
அவர் தனது ட்வீட்டில், அஜித், அவருடைய தாய் மற்றும் குடும்பத்தினருக்கு தன்னுடைய இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஒருவருக்கு தந்தையின் இழப்பு குறிப்பாக அன்பும் அக்கறையும் கொண்ட சுப்ரமணியன் அங்கிள் போன்றவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் விக்ரம் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ள விக்ரம், இந்த நேரத்தில் வலிமையாக இருக்க அஜித்திற்கும் அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











