சிட்டில என்னத்தவர எந்த ரவுடியும் இருக்கக்கூடாது.. விக்ரம் பிரபுவின் ரெய்டு டிரைலர் ரிலீஸ்!
சென்னை: விக்ரம் பிரபுவின் வித்தியாசமான நடிப்பில் உருவான ரெய்டு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
கார்த்தி இயக்கி உள்ள இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் தென்படாமல் இருந்த இவர் தற்போது இந்த படத்தில் நடித்துள்ளார்.
அரசியல், ரவுடியிசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையொட்டி வரும் 10ந் தேதி வெளியாக உள்ளது.

ரெய்டு திரைப்படம்: வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம் பிரபு போலீஸ் காரராக டாணாக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் காவலர்கள் படும் அவஸ்தை குறித்து சிறப்பாக கூறப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அண்மையில், இறுகப்பற்று திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
10ந் தேதி ரிலீஸ்: தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ரெய்டு படத்தில் நடித்துள்ளார். அதில், அனந்திகா, ரிஷிரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துத்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
விக்ரம் பிரபு பேச்சு: ரெய்டு படத்தின் இசை மற்றும் டிரைலர் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய விக்ரம் பிரபு, இறுகப்பற்று படத்தின் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. இறுகப்பற்று, டாணாக்காரன் ஒரு வித ஜானர் என்றால், ரெய்டு வேறுவிதமான ஜானரில் அமைந்த வித்தியாசமான படம் என்றார்.
ரெய்டு டிரைலர்: இதையடுத்து, ரெய்டு திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. அதில், செல்வராகவன் குரலில் இந்த உலகத்துல பெண்,பொன்,மண் இதைப்பற்றி கதை கேட்டு இருப்பீங்க... ஆனால்,இந்த கதையே வேற என்று டிரைலர் தொடங்குகிறது. இதில், விக்ரம் பிரபு அதிரடியான ஆக்ஷன் காட்சியில் மிரட்டியுள்ளார், சிட்டில என்னத்தவர எந்த ரவுடியும் இருக்கக்கூடாது என்று கர்ஜிக்கிறார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











