மயில்சாமியின் இனிமையான வழிகள்.. நடிகர் விக்ரம் உள்ளிட்டவர்கள் இரங்கல்!
சென்னை : நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மயில்சாமியின் மறைவிற்கு நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தீவிர சிவபக்தரான மயில்சாமி மகா சிவராத்திரி அன்று உயிரிழந்துள்ளதாக நடிகர் சார்லி தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகர் மயில்சாமி
பிரபல காமெடி மற்றும் குணசித்திர நடிகரான மயில்சாமி மாரடைப்பு காரணமாக இன்றைய தினம் உயிரிழந்தார். முன்னதாக மயில்சாமிக்கு இரண்டுமுறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இன்றைய தினம் அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோயிலில் சாமி தரிசனம்
நேற்றைய தினம் மகா சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். உடன் டிரம்ஸ் சிவமணியும் இருந்துள்ளார். இதையடுத்து அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய மயில்சாமி, பசிப்பதாக கூறி 4 மணியளவில் இட்லி சாப்பிட்டுள்ளார்.

அதிகாலையில் உயிரிழப்பு
இதையடுத்தே நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அவரை அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டுள்ளது.

திரையுலகினர் அஞ்சலி
இதையடுத்து அவரது உடலுக்கு திரையுலகத்தினர் தொடர்ந்து நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி அவர் பலமுறை தன்னை வீட்டிற்கு அழைத்ததாகவும் தான் இப்போது வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

விக்ரம் அஞ்சலி
இதேபோல, கோவை சரளா, பார்த்திபன், மனோபாலா உள்ளிட்டவர்களும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களது இனிமையான வேடிக்கையான வழிகள் எப்போதும் நினைவில் இருக்கும் அன்பு மயில் என்று தெரிவித்துள்ளார்.

மயில்சாமியின் இயல்பான காமெடி
தன்னுடைய இயல்பான காமெடியால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் மயில்சாமி. அவரது இழப்பு தமிழ் சினிமாவின் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அவர் வாழ்ந்த காலங்களில் தானும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











