Vimal On Marimuthu - மாரிமுத்துவுடன் ஒரு ஃபோட்டோ எடுக்க என் குடும்பத்துக்கு ஆசை.. மேடையில் அழுத விமல்
சென்னை: Ethirneechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) மாரிமுத்து குறித்து மேடையில் பேசிய விமல் உடைந்து அழுதது அங்கிருந்தவர்களை உருக செய்தது.
கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரிமுத்து. பிரசன்னா, உதயதாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இதனையடுத்து பல வருடங்கள் அமைதியாக இருந்த அவர் இரண்டாவது படமாக விமல், அனன்யா, பிரசன்னா உள்ளிட்டோரை வைத்து புலிவால் படத்தை இயக்கினார்.

புலிவாலும் தோல்வி: புலிவால் படம் ஒரு மலையாள படத்தின் ரீமேக்காக இருந்தாலும் அதில் மாரிமுத்து தன்னுடைய இன்புட்டையும் போட்டிருந்தார். இருந்தாலும் இந்தப் படமும் தோல்வியையே சந்தித்தது. பிறகு மிஷ்கின் யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார். அதில் அவரது நடிப்பு மிகச்சிறந்த பெயரை அவருக்கு பெற்றுக்கொடுக்க அடுத்தடுத்து நடிக்க பட வாய்ப்புகள் மாரிமுத்துவுக்கு கிடைத்தன.
முன்னணியில் மாரிமுத்து: கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட மாரிமுத்து தன்னுடைய எதார்த்த நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வெளிக்காட்டினார். கடைசியாக அவரது நடிப்பில் ஜெயிலர் படம் வெளியானது.அதிலும் தன்னுடைய நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவரது நடிப்பில் கங்குவா, இந்தியன் 2 உள்ளிட்ட 15 படங்கள் வெளியாகவிருக்கின்றன.
சின்னத்திரையில் மாரிமுத்து: வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனது அடையாளத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். எதிர்நீச்சல் நாடகத்தில் அவர் ஏற்றிருந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது. இந்த சூழலில் அவர் சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் சோகத்தில் தள்ளியது.

விமல் பேச்சு: இந்நிலையில் மாரிமுத்து குறித்து ஒரு நிகழ்வில் பேசிய விமல், "என் மனைவி, பசங்க எல்லோரும் திண்டுக்கல்லில் இருக்கிறார்கள். அவர்கள் ஜெயிலர் படம் பார்க்க போயிருந்தார்கள். படத்தில் மாரிமுத்துவை பார்த்ததும் எனது பொண்ணு எனது மனைவியிடம், என்ன அம்மா எதிர்நீச்சல் தாத்தா இருக்காரு. அவர் டெய்லி நைட்டு டிவியில்தானே வருவாரு இன்னைக்கு இங்க வந்திருக்காரு என சொல்லியிருக்கிறார்.
குடும்பத்தின் ஆசை: அந்த அளவுக்கு அவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரின் உள்ளத்திலும் அவர் ஆதிகுணசேகரனாக இடம்பிடித்துவிட்டார். மகள் இப்படி சொன்னதும் எனது மனைவி என்னிடம் சென்னை வரும்போது அவரிடம் கூட்டிட்டுப்போங்க. ஒரு ஃபோட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனா அவங்க சென்னை வருவதற்குள் இப்படி ஆகிவிட்டது" என உடைந்து அழுதபடி பேசி முடித்தார்.


Click it and Unblock the Notifications











