தலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி
சென்னை: தனக்கு ஏற்பட்ட ஒற்றைத் தலைவலியால் சண்டக்கோழி 2 படம் தாமதமானதாக விஷால் தெரிவித்துள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள படம் சண்டக்கோழி 2. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் விஷால், முதலில் ஒரு தயாரிப்பாளராக பேசிவிடுகிறேன் என படக்குழுவை பாராட்டினார்.
அப்போது, தமிழகம் முழுவதும் எந்தெந்த திரையரங்குகளில் எல்லாம் சண்டக்கோழி 2 ரிலீஸ் ஆகிறதோ அந்த திரையரங்க உரிமையாளர்களை அழைத்து பதினேழாம் தேதி சிறப்புக் காட்சி திரையிட்டுக் காட்டப்போவதாகவும், அது ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்லை. கான்ஃபிடன்ஸ் எனவும் கூறினார்.
இப்படம் ஒரு தயாரிப்பாளராக மிகப்பெரிய பெயரை தனக்கு வழங்கும் எனத் தெரிவித்தார். "ஏப்ரல் மாதம் படம் ரிலீசாக வேண்டியது. ஆனால் காரைக்குடியில் படப்பிடிப்பு நடந்தபோது எனக்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டது. என்னால் தாங்க முடியவில்லை. அப்போது ட்ரீட்மென்டுக்காக அமெரிக்கா சென்றுவிட்டேன்.
கிட்டதட்ட 20 நாட்களுக்கும் மேலாக அமெரிக்காவில் இருந்ததால் ஷுட்டிங் பாதிக்கப்பட்டது. லிங்குசாமி மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்" எனக் குறிப்பிட்டார். கிராமத்து காட்பாதார் என ராஜ்கிரணை அழைத்த விஷால், அவரைத் தொட்டாலே பாசிட்டிவ் எனர்ஜி வந்துவிடும் என்றார்.
மிகச்சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் வருகிறார் என்றும் விரைவில் அவர் தேசிய விருதை வாங்குவதைப் பார்க்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம் எனவும் கூறினார். இப்படம் அக்டோபர் 18ஆம் தேதி ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











