ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு.. என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.. விஷால் கண்ணீர் பதிவு!
சென்னை: இயக்குனர் பா ரஞ்சித் தங்கலான் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது 'வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இதில் ஆர்யா, தினேஷ் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில். இன்றைய படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.
வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ந் தேதியில் இருந்து , நாகப்பட்டினம் மற்றும் கீழையூர் அருகே கிராமம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. இதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் பணியாற்றி வந்தார். இன்று சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது காரில் இருந்து குதிக்கும் போது மோகன் ராஜ் தவறி விழுந்ததில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்ததைத் தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவரின் மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் விஷால் இரங்கல்: இந்நிலையில், நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இயக்குநர் ரஞ்சித்தின் படப்பிடிப்பில், கார் கவிழ்ந்து விழும் காட்சியில் ஸ்டண்ட் கலைஞர் ராஜு காலமானார் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ராஜுவை பல வருடங்களாக எனக்கு தெரியும். அவர் என் படங்களில் பல ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளை மீண்டும் மீண்டும் செய்து காட்டுவார். ஏன் என்றால், அவர் மிகவும் துணிச்சலான மனிதர். அவரது மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது, எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் அவரது குடும்பத்தினருக்கு மன தைரியத்தை தரட்டும். இது ட்வீட் மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் எதிர்காலத்திற்கும், திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார். என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்..


Click it and Unblock the Notifications











