மருந்து கூட வாங்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.. முதல்வரிடம் நேரில் கோரிக்கை வைத்த விஷால்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால் திரைப்படக் கலைஞர்கள் குறித்து கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தின் 13வது முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். பதவியேற்ற கையோடு 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டு மக்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.
புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினை அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஸ்டாலினை சந்தித்த விஷால்
அந்த வகையில் நடிகர் விஷால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.

மருந்து வாங்க முடியாமல்
அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையும் எடுத்து கூறியதாகவும் எத்தனை கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல், மருந்து வாங்க கூட முடியாமல் கஷ்டபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கியதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் உறுதி அளித்தார்
மேலும் கொரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அதைக் கட்டுக்குள் கொண்டு வந்ததும் தனது கோரிக்கையை செய்து தருவதாக முதல்வர் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார் விஷால்.

போட்டோக்கள் வைரல்
மேலும் முதல் முறையாக எம்எல்ஏவாகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்து கூறியதாக விஷால் தெரிவித்துள்ளார். விஷால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











