அரசியல் என்ட்ரி.. என்ன ரஜினியை இப்படி கலாய்ச்சிட்டாரு விஷால்?.. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை: நடிகர் விஷால் இப்போது ரத்னம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி போதிய வரவேற்பை பெறவில்லை. படம் ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. ஹரி இயக்கம் என்பதால் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலுக்கு வருவேன் என்று விஷால் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு விஷால் அளித்த பதில் ரஜினி ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.
விஷால் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. அவரது கரியரிலேயே ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது என்றால் அது மார்க் ஆண்டனி திரைப்படம்தான். இதனால் விஷால் உற்சாகத்தோடு இருக்கிறார். அதே உற்சாகத்தோடு ஹரி இயக்கத்தில் இப்போது ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இருவரும் இணைந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. எனவே இந்தப் படமும் ஹிட்டாகும் என்று விஷால் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

ட்ரெய்லர் ரிலீஸ்: படத்தின் ட்ரெய்லர் நேற்று ரிலீஸானது. இயக்குநர் ஹரியின் வழக்கமான ஸ்டைலில் படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உறுதி செய்திருக்கிறது. ஆனால் போதிய வரவேற்பை படத்தின் ட்ரெய்லர் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படமானது ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை விஷால் இதில் தக்க வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
உதவும் விஷால்: இதற்கிடையே விஷால் தன்னால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு தொடர்ந்து செய்துவருகிறார். அதுதொடர்பான வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி ட்ரெண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விஷால் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்ற பேச்சு கடந்த சில காலமாகவே ஓடிக்கொண்டிருந்தது. முக்கியமாக அவர் பாஜகவில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் விஷால் சில மாதங்களுக்கு முன்பு தனது மக்கள் இயக்க கொடியை அறிமுகப்படுத்தி, எதிர்காலத்தில் இயற்கை வேறு மாதிரி முடிவெடுத்தால் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார்.
அரசியல் வருகை: சூழல் இப்படி இருக்க விஷால் அரசியலுக்கு வருவது தற்போது உறுதியாகியுள்ளது. அவரே அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அதேசமயம் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும்; 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யும் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். எனவே அவருக்கு போட்டியாக விஷால் இருப்பாரா இல்லை இணைந்து பயணிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஷால் பதில்: இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார் விஷால். அப்போது அவரிடம் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், "நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன். அதைவிட்டுவிட்டு, 'வரப்போறேன், அவர் சொன்னால்தான் வருவேன், வர நேரத்துல வருவேன், வந்தாலும் வருவேன்' என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். நான் அரசியலுக்கு வருகிறேன்" என்றார்.
ரஜினியை கலாய்த்த விஷால்?: இதனைப் பார்த்த ரசிகர்கள் ரஜினியை விஷால் கலாய்த்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். ஏனெனில் ரஜினிகாந்த்தும் தான் அரசியலுக்கு வரவிருப்பதாக கூறி, தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று சில வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதேசமயம் அவர் அந்த முடிவை எடுப்பதற்கு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேல் ஆனது. அதுவரை அவரிடம் அரசியலின் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டால், ஆண்டன் நினைத்தால் வருவேன் என்று ஏகப்பட்ட பதில்களை சொல்லி நழுவிக்கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவழியாக ஆன்மீக அரசியல் என்று ரஜினி கூறியதால்; அவர் அரசியலுக்கு வந்துவிட்டார் என்று முழுதாக அவரது ரசிகர்கள் நம்பிய நேரத்தில், அரசியலுக்கு ரஜினி வரவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. இதனை மனதில் வைத்துதான் விஷால் இந்த மாதிரியான பதிலை சொல்லியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூற; மறுபக்கம் விஷாலை ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











