கருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்
நடிகர் சங்கக் கட்டிடத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவையொட்டி, தமிழ்த் திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் ரஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய விஷால், "திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்துவது எங்களுடைய கடைமை. ஸ்டாலின், ரஜினி உள்ளிட்ட எல்லோரும் வந்ததற்கு நன்றி. ஒரு மாமனிதருக்கு இப்படி ஒரு நிகழ்வை நடத்துவது எல்லோருடைய கடைமை. கருணாநிதி ஒரு போராளி. அவர் மறைந்தாலும் அவரது சாதனைகள் மறையாது. இன்னும் எத்தனை தலைமுறையானலும் அவரது பெயரை மறக்க முடியாது.
ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்பட எத்தனையோ நல்ல திட்டங்களை கருணாநிதி கொண்டுவந்துள்ளார். இளைஞர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளார். நடிகர் சங்கம் சார்பில் அங்குடைய விண்ணப்பம் என்னவென்றால், அவரது பேனாவை புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைக்க வேண்டும். அது அவரின் புகழை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும்" என அவர் கேட்டுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











