விஷாலுக்கு என்ன ஆச்சு.. உடல்நிலை குறித்து பரவும் வதந்தி.. வெளியானது மருத்துவ அறிக்கை!
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற மதகஜராஜா செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கை நடுங்கியபடியும், குரல் நடுங்கியும் பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல பரவியதை அடுத்து,பலரும் இணையத்தில், விஷாலுக்கு என்ன ஆச்சு என கேட்டு வரும் நிலையில், விஷாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான திரைப்படம் தான் 'மதகஜராஜா'. விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இப்படம் பல விதமான பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் இருந்தது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட போதும், படம் வெளியாகாத நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் 12ந் தேதி வெளியாக உள்ளது.

விஷாலுக்கு என்ன ஆச்சு: இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷால் பார்ப்பதற்கே மிகவும் சோர்வுடன், கண்கள் சிவந்தபடி இருந்தார். கையில் மைக்கை பிடித்து அவரால் பேசவே முடியவில்லை. கை நடுங்கிக் கொண்டே இருந்தது. அதே போல, அவரின் குரலும் நடுங்கியது. இதைப்பார்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி, அமர்ந்து பேசலாம் சார் என்று அவரை அமரவைத்துவிட்டு, விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். படத்தின் விளம்பரத்திற்காக காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் வந்து இருக்கிறார் என்று கூறினார்.
மோசமான விமர்சனம்: இதையடுத்து, இணையத்தில் விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ காட்டுத்தீ போல பரவியது. இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் சேகுவேரா, காய்ச்சல் வந்தால் ஏன் கை நடுங்க வேண்டும், காய்ச்சல் இருக்கும் போது எதற்கு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று விமர்சனத்தை வைத்தார். இப்படி பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வரும் நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து விஷால் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், அவர் முழுமையான படுக்கையில் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏன் இப்படி : இதைப்பார்த்த விஷாலின் விஸ்வாசிகள், 12 வருடத்திற்கு பிறகு படம் வெளியாக வேண்டும் என்பதற்காகத்தான் விஷால் அந்த நிலையிலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு அவரை பற்றி தப்பு தப்பாக செய்திகள் வெளிவருவதை பார்க்கும் போது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளனர். மேலும், விஷால் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைவு தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











