இந்த வன்மம் ஏன்? 24 மணி நேரத்திற்குள் பதில்.. தயாரிப்பாளர் சங்கத்திற்கு வார்னிங் கொடுத்த விஷால்!
சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில், நடிகர் தனுஷ், விஷால், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும், நடிகர் தனுஷ் படம் நடித்தால் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அது மட்டுமில்லாமல், நடிகர் விஷால், சங்கத்தின் பணத்தை எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்றால் எதற்கு பொதுக்குழு என்று உள்ளது? விஷால் செய்தது தவறு, அதை சரி செய்ய வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்றும் அதற்கு அவர் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஷால், ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திய தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்துள்ளார்.

விஷால் அறிக்கை: அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் என் பெயரை குறிப்பிட்டு, என் மீது பல அவதூறுகளை சுமத்தி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி ஒன்றை பார்த்தேன். அதில் காணும், Special Auditor அவர்களின் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுநாள் வரை சங்கம் சார்பாக என்னிடம் முறையாக எவ்வித விளக்கமும் கேட்கப்படாத நிலையில், இப்படி ஒரு பொய்யான பத்திரிக்கை செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன்.
அனைவரின் ஆலோசனைப்படி: 17ம் ஆண்டு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டேன். சங்க உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு சங்க சட்ட விதிகளின் அடிப்படையில், சங்க பொறுப்பாளர்கள் அதில் செயலாளராக இருந்த திரு கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் தீர்மானங்களின்படி ஆயுட்கால காப்பீடு திட்டம், ஓய்வூதியத் திட்டம், கல்வி உதவி தொகை, திருமண திட்டம், என பல்வேறு திட்டங்களை உறுப்பினர்களின் ஆலோசனைப்படி செயல்படுத்தி உள்ளோம்.
விளக்கம் கேட்கவில்லை: எந்தவிதமான தவறும் செய்யாத பட்சத்தில் தாங்கள் என் மீது தீர்மானம் நிறைவேற்றியதாக பத்திரிக்கை செய்தி ஏற்புடையதல்ல, என்பதை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறேன். நலத்திட்ட உதவிகள் முழுமையாக உறுப்பினர்களின் பயனடைவதற்கு அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் முறைகேடு உள்ளதாக சந்தேகம் இருக்கும் பட்சத்தில், அது தொடர்பாக விளக்கவும், தெளிவுபடுத்தவும் கடந்த கால நிர்வாகத்திற்கு முறையான சந்தர்ப்பம் அளிக்காமல், தாங்கள் நேரடி முடிவெடுத்து ஆதாரமற்ற பழி சுமத்துவது, காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே அறியப்படுகிறது.
மறைமுக ரெட் கார்டா: என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏன் தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்தாலோசிக்க வேண்டும்? இவை விஷால் என்ற நடிகருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதிக்கும் மறைமுக ரெட் கார்ட் ஆ?
என் மீது தனிப்பட்ட ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் இக்கடிதம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் தங்கள் வன்மத்தினால் அனுப்பிய பத்திரிக்கை செய்தியை திரும்ப பெற்று பதில் அளிக்க வேண்டும். இல்லை எனில் சட்ட ரீதியாக நான் எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் விஷால் அறிக்கை விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











