சர்க்கஸ் பார்ப்பது போல இருந்தது.. யாரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல..தோனியை சாடிய விஷ்ணு விஷால்!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான தோல்வியை
அணி பதிவு செய்தது. இதனால் நோந்து போன ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல என்று தோனியை மறைமுகமாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டி தொடங்கிவிட்டாலே அதை ரசிகர்கள் திருவிழாப் போல கொண்டாடுவார்கள். இதுவும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது என்றால், ரசிகர்களின் மகிழ்ச்சி இரண்டு மடங்காகிவிடும் ஆனால், இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, விட்டுக்கொடுக்காமல் இறுதி வரையாவது விளையாடுங்கள் என்று ரசிகர்கள் கெஞ்சும் அளவிற்கு அவர்களின் விளையாட்டு இருந்தது.
சிஎஸ்கே - கொல்கத்தா: நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்து மிகவும் மோசமாக விளையாடியது. அந்த இலக்கை எதிரணி வெறும் 10.1 ஓவர்களிலேயே எட்டிவிட்டது.வழக்கமாக ஆறாவது வரிசையில் பேட்டிங் இறங்கும் தோனி, நேற்று ஒன்பதாவதாக இறங்கினார். தோற்றுக் கொண்டிருக்கும் அணியை ஒரு கேப்டனாக அவர் முன்கூட்டியே இறங்கி காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால், தோனி அதை ஏன் செய்யவில்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்: சென்னை அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்து வந்த நிலையில், காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் தொடரில் இருந்து வெளியேறினார். அதன் பின் தான் தோனி கேப்டனாக வந்தார். அவர், சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வார் என ரசிகர்கள் பெரிதும் நம்பினர். ஆனால், மிகவும் மோசமான தோல்வியை தான் சென்னை அணி மீண்டும் பெற்றுள்ளது. 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில், 5 முறை கோப்பையை சென்னை அணி வென்றுள்ளது. ஆனால், தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது, வரலாற்றில் இதுவே முதல்முறை. இந்த தோல்விக்கு காரணம் மோசமான கேப்டன்சி தான் கிரிக்கெட் பிரியர்கள் பலரும் இணையத்தில் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

சர்க்கஸா: இந்நிலையில், நேற்று சேப்பாக்கத்தில் நடந்த போட்டியை பார்த்த விஷ்ணு விஷால், சென்னை அணியின் மோசமான தோல்வியால மனமுடைந்து, தோனியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால், இது அராஜகம். ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்க வேண்டும். எந்தவொரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவதில்லையா? இது இப்போது ஒரு சர்க்கஸை பார்ப்பது போல உள்ளது. எந்தவொரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











