ராட்சசனை மிஞ்சி விட்டதா? போர் தொழில் படம் குறித்து கேள்வி கேட்ட விஷ்ணு விஷால்!
சென்னை : ராட்சசன் படத்தை மிஞ்சி விட்டதா போர் தொழில் படம் என்று விஷ்ணு விஷால் கேள்வி எழுப்பி உள்ளார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்,சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்த அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் போர் தொழில்.
அப்லாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஈ4 எக்ஸ்ப்ரிமென்ட் எப்ரியஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் கடந்த வாரம் தியேட்டரில் வெளியானது.
போர் தொழில் : சீரியல் கில்லிங்கை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் அசோக் செல்வன் கிரைம் பிராஞ்ச் எஸ்.பியான, சரத்குமாரிடம் உதவியாளராக நியமிக்கப்படுகிறார். இந்த நேரத்தில் திருச்சியில் அடுத்தடுத்து 2 பெண்கள் ஒரே மாதிரி கொல்லப்படுகின்றனர். இந்த தொடர் கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கும் வேலை சரத்குமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அடுத்தடுத்து தொடர் கொலை : இதற்கிடையில் மேலும் 2 பெண்கள் அதே பாணியில் கொல்லப்படுகிறார்கள். கொலையாளி யார்? அவர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்தார்? இதைக் கண்டுபிடிக்கும் பயணத்தில் சரத்குமாருக்கும் அசோக் செல்வனுக்கும் என்ன ஆனது, கொலையாளியை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது தான் போர் தொழில் திரைப்படத்தின் மீதிக் கதை.

வசூல் அதிகரிப்பு : படம் வெளியான முதல் நாள் 95 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்த நிலையில், படத்திற்கு வந்த நல்ல விமர்சனத்தால் படம் படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டன. இதனால், படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது. இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராட்சசனை மிஞ்சி விட்டதா? பலரும் பாராட்டி வரும் போர் தொழில் படம் குறித்து விஷ்ணுவிஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். இதில், ராட்சசனை மிஞ்சி விட்டதா? படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி உள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த பதிவுக்கு அசோக் செல்வன், மச்சி அதற்கு பதில் சொல்லும் சிறந்த நபர் நீ தான். நீயே பார்த்துவிட்டு சொல்லு. நன்றி டா. நீ எனக்காக மகிழ்ச்சியாக இருப்பாய் என்று எனக்கு தெரியும். வாழ்த்துக்கள் என்றும் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











