நடிகர் சங்க தேர்தல் தொடர்பான உரிமையியல் வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு மீண்டும் பரிந்துரை!
சென்னை: நடிகர் சங்க தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரிய உரிமையியல் வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பரிந்துரைத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இந்த தேர்தல் நடத்தப்பட்டிருப்பதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்தலை நிறுத்தி வைத்த சங்க பதிவாளரின் உத்தரவை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்க தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி பெஞ்சிமின் மற்றும் ஏழுமலை தொடர்ந்த உரிமையியல் வழக்குகளையும் ஒரே நீதிபதியின் முன் பட்டியலிடும்படி, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
கடந்த 20ஆம் தேதி நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக ரிட் வழக்கும், உரிமையியல் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவதை தவிர்க்க, நடிகர் சங்க தேர்தல் தொடர்பான அனைத்தும் வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட, வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











