Kavin & Pradeep Interview: கவினை பார்த்து நிறைய மோட்டிவேட் ஆகியிருக்கேன்.. பிரதீப் சுவாரஸ்யம்!
சென்னை: நடிகர் கவின் மற்றும் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் இருவரும் சிறந்த நண்பர்கள். பல ஆண்டுகளாக இவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது.
இருவரும் இணைந்து பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். கலாட்டாக்களுடன் இவர்களது பேட்டி பார்ப்பவர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தாங்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பை தொடர்ந்து வருவதாகவும் கேவலமான விஷயங்களுக்காக எல்லாம் சண்டை போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கவின்: நடிகர் கவின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர். முன்னதாக விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர்மூலம் கவனம் பெற்ற இவர், லிப்ட், டாடா உள்ளிட்ட தேர்ந்தெடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இவர் கைக்கோர்க்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜ், நெல்சன் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இவர் அடுத்தப் படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் பிரதீப்: கவினும் தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சிமூலம் பிரபலமடைந்துள்ள பிரதீப்பும் மிகச்சிறந்த நண்பர்கள். பிரதீப்பும் வாழ் படத்தில் நடித்து பிரபலமானவர். பள்ளி காலத்தில் இருந்தே கவின் மற்றும் பிரதீப் இருவருக்கும் சிறப்பான நட்பு இருந்து வந்ததாகவும் இருவரும் இணைந்து பள்ளி நாட்களில் செய்த குறும்புத் தனங்கள் குறித்தும் இருவரும் இணைந்து கொடுத்துள்ள சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளனர். பள்ளியில் படிக்கும்போது வகுப்பு நடக்காமல் இருப்பதற்காக விளையாட்டாக வெடி வெடித்த சம்பவங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
நட்பு கொடுக்கும் நம்பிக்கை: கல்லூரி படிக்கும்போது பிரதீப் எலெக்ஷனில் போட்டியிட்டு தோற்றதாகவும் அதற்காக கவின் பிரசாரம் செய்ததாகவும் கூறியுள்ளனர். இந்த எலெக்ஷனில் தோற்ற போதிலும் ஜெயித்தவர்களை காட்டிலும் தாங்கள் சிறப்பாக கொண்டாடியதாகவும் இருவரும் கூட்டாக நினைவலைகளை பகிர்ந்துள்ளனர். இருவரும் அதிகமாக பேசிக் கொள்வதற்கு நேரம் கிடைக்காது என்றபோதிலும் ஒருவருக்காக மற்றவர் இருப்பார் என்ற நம்பிக்கை மட்டும் எப்போதும் போகாது என்றும் கூறியுள்ளனர்.
நோ பிறந்ததினம்.. ஒன்லி காதலர் தினம்: தாங்கள் எப்போதும் பிறந்தநாட்களை கொண்டாடியதில்லை என்றபோதிலும் காதலர் தினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடுவோம் என்றும் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதுடன் ஒரே கிளாசில் இரண்டு ஸ்ட்ராக்களை போட்டு ஜூஸ் குடிப்பது போன்ற அலப்பறைகளை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர். ஒருமுறை பெங்களூரில் இருந்த பிரதீப்பை வரவழைத்து வேலன்டைன் டே கொண்டாடிய நிகழ்வு குறித்தும் கவின் பகிர்ந்தார்.
கவினிடம் இருந்து உத்வேகம்: இதனிடையே எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதை முனைப்புடன் செய்து முடிக்கும் கவினை பார்த்து தான் அதிகமாக உத்வேகம் அடைந்துள்ளதாகவும் இதுபோன்ற ஆட்களைதான் தான் அருகில் வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார். கவின் தன்னுடைய அனைத்து முயற்சிகளிலும் வெறித்தனமாக செயல்பட்டு வருவதாகவும் தானும் ஓரளவிற்கு அதை செய்து வருவதாகவும் பிரதீப் அந்தப் பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











