விஷால் -ஆர்யா மிரட்டும் எனிமி படம்.... நவம்பர் 4ம் தேதி ரிலீஸ்!
சென்னை : நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து மிரட்டும் எனிமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் தீபாவளியையொட்டி நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகும் என்றும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனிமி படம்
நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து மிரட்டும் படம் எனிமி. இவர்கள் இருவரும் சினிமாவை தாண்டி மிகச்சிறந்த நண்பர்கள் என்பது அறிந்ததே. சமீபத்தில் ஆர்யாவிற்கு குழந்தை பிறந்ததையும் விஷால்தான் ட்விட்டர் மூலம் அறிவித்து தான் மாமா ஆகிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

எதிரெதிர் துருவங்கள்
இந்நிலையில் இவர்கள் இருவரும் எதிரெதிர் துருவங்களாக நடித்துள்ள படம் எனிமி. படத்தில் விஷால் ஹீரோவாகவும் ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். முன்னதாக இவர்கள் இருவரும் இயக்குநர் பாலா டைரக்ஷனில் அவன் இவன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
இந்நிலையில் எனிமி படத்தின் பத்தல, டும்டும்டும், லிட்டில் இந்தியா ஆகிய பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

நவம்பர் 4ல் ரிலீஸ்
படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது படம் தீபாவளியையொட்டி நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக படத்தின் ட்ரெயிலரும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ரேஸில் எனிமி
முன்னதாக ஆயுதபூஜையையொட்டி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அண்ணாத்த, மாநாடு உள்ளிட்ட படங்களுடன் எனிமி படமும் ரேஸில் பங்கேற்கவுள்ளது. இதுகுறித்து விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வரவேற்பை பெற்ற டீசர்
முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. சிறையில் இருந்து தப்பிக்கும் ஆர்யாவை எதிர்க்கும் நாயகனாக விஷால் அதில் காணப்பட்டார். இந்நிலையில் அவன் இவன் படத்திற்கு பிறகு இவர்களின் இந்த காம்போ சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











