விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க மறுத்த நடிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக விக்ரம் படம் மாறி உள்ளது. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே பெயர் கிடைத்த நிலையில், விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கேரக்டரில் நடிக்க மறுத்த பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2017ம் ஆண்டு மாநகரம் படத்தை இயக்கி இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் லோகேஷ் கனகராஜ். தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த படத்தின் கதை அமைப்பு வித்தியாசமாக இருந்ததாக அந்த படத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில் 11 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ்: இதைத்தொடர்ந்து அதிரடி திரில்லர் ஜானரில் கைதி படத்தை இயக்கினார். இந்த படம் சினிமா துறையினரை, லோகேஷ்கனகராஜ் பக்கம் திருமபி பார்க்க வைத்தது. கைதி திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து, திரையரங்குகளில் எங்கும் ஹவுஸ்புல் காட்சிகளால் நிரம்பி வழிந்தன. உலகெங்கிலும் வெளியான இப்படம் 105 கோடி வசூலித்தது.
மாஸ்டர்: இதையடுத்து, நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் வெளியானது, கொரோனா காலகட்டத்தில் இந்த படம் கடும்கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளில் வெளியான போதும், மாஸ்டர் படத்தை பார்க்க கூட்டம் மக்கள் அலைமோதினார்கள். எந்த ஒரு திரைப்படத்திற்கும் கிடைக்காத அளவுக்கு 90% திரையரங்குகளில் வெளியாகி கெத்து காண்பித்து சுமார் 230 கோடி வரை வசூல் செய்தது மாஸ்டர் படம்.
கெத்துகாட்டிய விக்ரம்: இப்படி அடுத்தடுத்து ஹிட் படத்தை கொடுத்துக்கொண்டு இருந்த லோகேஷ், உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தை இயக்கினார். 2022ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, காயத்ரி சங்கர், சந்தான பாரதி என பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக தூள் கிளப்பி வசூலில் அள்ளியது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 200 கோடியை நெருங்கி உலகளவில் 430 கோடி வரை வசூல் செய்தது. கமலின் எந்த படமும் செய்யாத சாதனையை விக்ரம் படம் செய்தது.
விஜய்சேதுபதி: விக்ரம் படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல பெயர் கிடைத்த நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கேரக்டரில் நடிக்க மறுத்துள்ளனர். அதாவது, விஜய் சேதுபதியை சந்தானம் கதாபாத்திரத்திற்கு அணுகுவதற்கு முன்பு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் பிரபு தேவா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் கேட்டதாகவும், அவர்கள் அந்த சமயத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க மறுத்துள்ளனர்.
மிரட்டிவிட்டார்: அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு வந்துள்ளது. நடிப்பின் மீது தனக்கு இருக்கும் தாகத்தால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்டாக செய்து முடிக்கும் விஜய் சேதுபதி, சந்தானம் கேரக்டரில் அட்டகாசமாக நடித்து அனைவரையும் மிரட்டிவிட்டார். ஆனால் விஜய் சேதுபதி எதிர்பார்த்ததை விட, இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.


Click it and Unblock the Notifications











