‘ஹை பிரீஸ்டஸ்’... மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெப் சீரிஸ் மூலம் ரீ என்ட்ரியாகும் பிரபல நடிகை!
நடிகை அமலா நீண்ட இடைவெளிக்கு பிறகு வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார்.
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகை அமலா. இம்முறை அவர் நடிக்க இருப்பது வெப் சீரிஸ்.
90-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகர்களுடன் நடித்தவர் நடிகை அமலா. தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்தவர்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவைத் திருமணம் செய்து கொண்டபின், நடிப்பதை நிறுத்திக் கொண்ட அமலா, சமூகசேவைகளில் ஈடுபட்டு வந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்தார். அதன் தொடர்ச்சியாக அவரை வெள்ளித்திரையிலும் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் நடிப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் அவர் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் அமலாவுடன் நடிகை சுனைனாவும் நடிக்கிறார்.
காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சுனைனா ஏற்கனவே, 'நிலா நிலா ஓடிவா' என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார்.
தெலுங்கில் உருவாகும் இந்த வெப் சீரிஸிற்கு 'ஹை பிரீஸ்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. புஷ்பா என்ற பெண் இயக்குநர் இதனை இயக்குகிறார். இதில் அமலாவிற்கு முக்கிய கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











