சிகிச்சை பெற்று வந்த... பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்!
சென்னை: பிரபல நாட்டுப்புறப் பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா, இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 83.
Recommended Video
பிரபல நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா. இவர் தூள் படத்தில், நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அந்தப் படத்தில் இடம்பெறும் 'சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி'என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் அவரை அடையாளம் காட்டியது.

மேடை நிகழ்ச்சிகள்
மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்த இவர், ஏராளமான நாட்டுப்புற பாடல்களையும், சினிமா பாடல்களையும் பாடி இருக்கிறார். தூள் படத்தை அடுத்து, காதல் சடுகுடு, ஏய், கோவில், தேவதையை கண்டேன், சண்டை, பூ, வேங்கை, வீரம் உட்பட 50-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். சுமார், இரண்டாயிரத்துக்கும் அதிகமான மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

கலைமாமணி விருது
லண்டன், சிங்கப்பூர், மலேசியா உட்பட வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். டி.வி.யில் சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக, அவதிப்பட்டு வந்தார். அவரது மருத்துவச் செலவுக்கு நடிகர்கள், விஷால், சிவகார்த்திகேயன், தனுஷ் உட்பட பலர் உதவினர்.

குணமடைந்து விட்டேன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது பெயரில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்திருந்தார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த நவம்பர் மாதம், தான் குணமடைந்து விட்டதாகவும் இப்போது நலமுடன் இருப்பதாக்கவும் தனக்கு உதவியவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்திருந்தார்.

இறுதிச் சடங்கு
இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்க இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இறப்புகள் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











