பாலியல் தொல்லை குறித்து பேசியதற்கு வெட்கப்படவில்லை.. குஷ்பூ அதிரடி
சென்னை: தனது தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பேசியதற்கு வெட்கப்படவில்லை என நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த், பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் குஷ்பூ. மும்பையை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு முறையாக தமிழை கற்றுக்கொண்டார் குஷ்பூ. தனது அழகாலும், நடிப்பாலும் முதல் படத்திலிருந்தே கவனத்தை ஈர்த்து அடுத்தடுத்து உச்சக்கட்டத்திற்கு சென்றார் குஷ்பூ. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

நடிகை டூ அரசியல்வாதி குஷ்பூ
மும்முரமாக நடிப்பில் கவனம் செலுத்திவந்த குஷ்பூ ஒருகட்டத்தில் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பினார். அதன்படி திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். சில வருடங்கள் அங்கிருந்த குஷ்பூ சில பிரச்னைகளால் காங்கிரஸுக்கு மாறினார். பின்னர் அங்கிருந்து மாறி தற்போது பாஜகவில் இருக்கிறார். அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் குஷ்பூ ஓபன் டாக்
இந்தச் சூழலில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு குழந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாக இருக்கும். எனது அம்மாவுக்கு மிகவும் மோசமான திருமண வாழ்க்கைதான் அமைந்தது. மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்பத் தலைவனாகத்தான் அப்பா இருந்தார்.

பாலியல் தொல்லையை அனுபவித்த நடிகை குஷ்பூ
எனது அப்பா அவரது ஒரே மகளான என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். அது அவரது பிறப்புரிமை போல் நினைத்துக்கொண்டிருந்தார். எனக்கு 8 வயதாகும்போது என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார்' என தனது சிறு வயது வாழ்க்கை குறித்து ஓபனாக பேசினார். குஷ்பூவின் இந்தப் பேட்டி கடந்த சில நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

அப்படி பேசியதற்கு நான் வெட்கப்படவில்லை - குஷ்பூ
சமீபத்தில் அளித்த பேட்டி குறித்து பேசிய குஷ்பூ, "நான் ஒன்றும் திடீரென அப்படி பேசவில்லை. நேர்மையாக நடந்ததை சொன்னேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. குற்றம் செய்தவர்தான் வெட்கப்பட வேண்டும். பெண்களோ, பெண் குழந்தைகளோ தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும். அவர்கள் வலிமை மிக்கவர்களாக இருக்க வேண்டும். என்ன நடந்திருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி வெளிப்படையாக பேசிவிட்டு தங்களது பயணத்தை அவர்கள் தொடர வேண்டும்" என கூறியிருக்கிறார். குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டிக்கும் தற்போது கூறியிருப்பதற்கும் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











