தவறாக நடத்தினார்; கொல்ல முயன்றார்.. மலையாள நடிகை அஞ்சலி பரபரப்பு புகார் - அதிர்ச்சியில் கோலிவுட்
திருவனந்தபுரம்: தான் நடித்த முதல் தமிழ் படத்தின் இணை தயாரிப்பாளர் மீது மலையாள நடிகை அஞ்சலி நாயக் தெரிவித்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மலையாள திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை அஞ்சலி நாயர். குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகமான அவர் கடந்த 2009ஆம் ஆண்டு கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழிலும் நெல்லு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அந்தப் படத்தில் பாக்யாஞ்சலி என்ற பெயரில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த ரஜினியுடன் அஞ்சலி
தொடர்ந்து பல மலையாள படங்களிலும், சில தமிழ் படங்களிலும் நடித்துவந்த அஞ்சலி நாயர், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திலும் நடித்தார். மிகப்பெரிய ரோல் இல்லாவிட்டாலும், படத்தில் சிறு வயது ரஜினிக்கு தாயாக வந்து செல்வார் அஞ்சலி நாயர்.

தயாரிப்பாளர் மீது அஞ்சலி நாயர் அளித்த புகார்
அஞ்சலி நாயர் யூட்யூப் சேனல் மூலம் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த பிரச்னைகளையும் பேசிவருகிறார். அந்தவகையில் சமீபத்தில் பேசிய அவர், "நடிக்க ஆரம்பித்த போது எனக்கு நன்றாக தமிழ் பேச தெரியும். அதனால்தான் நான் தமிழ் மொழியில் நிறைய படங்களில் நடிப்பதற்கு விரும்பினேன். என்னை எல்லோரும் உங்களது பூர்வீகம் தமிழ்நாடா என்று கேட்பார்கள். என்னுடைய முதல் தமிழ் படத்தின் வில்லன் என்னை தவறாக நடத்த முயன்றார். அது அப்போது பெரும் சர்ச்சையானது.

வில்லன் மட்டுமில்லை இணை தயாரிப்பாளரும்கூட
அந்தப் படத்தில் அவர் வில்லனாக மட்டும் இல்லை. அப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். அதனால் படப்பிடிப்பு இல்லாதபோதும் என்னை வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார். அவர் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.
என் தங்கைக்கு தமிழ்நாட்டில்தான் திருமணம் நடந்தது. அதனால் என்னிடம் ப்ரோபோஸ் செய்தார் அவர். ஆனால் எனக்கு கேரளாவும், மலையாளமும்தான் பிடிக்கும். அதனையடுத்து நான் எங்கு சென்றாலும் என்னை பின் தொடர்ந்துகொண்டே இருந்தார். ஒருமுறை என்னை ரயிலில் இருந்து தள்ளிவிடவும் முயன்றார்.

பையை எடுத்துவிட்டு ஓடிய இணை தயாரிப்பாளர்
ஒருமுறை எனது பையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். பையை கொடுக்க வேண்டுமென்றால் வீட்டுக்கு வரவேண்டும் என அழைத்தார். எனக்கு அப்போது காவல் துறையின் உதவி தேவைப்பட்டது. அதன் பிறகு நான் கேரளா சென்றுவிட்டேன். எனது குடும்பத்தில் பல கலைஞர்கள் உள்ளனர். என் நண்பர்களும் எனக்கு சிறந்த ஆதரவு அளித்தார்கள்" என்றார். அஞ்சலி நாயரின் இந்த புகார் கோலிவுட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











