எங்கள் குரல் உங்கள் லத்தியை விட வலிமையானது.. டெல்லியில் வெடித்த நீட் போராட்டம்... அஞ்சலி ஆதரவு!
சென்னை: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன! இப்போராட்டத்திற்கு ஆதரவாகத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் களமிறங்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்வியாளர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இளைஞர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். பேரணியைக் கலைக்கப் போலீஸார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாணவர்களுக்கு ஆதரவாகப் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் போராட்டம் : டெல்லியைத் தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் இயக்குநர் அமீர், வெற்றி மாறன், பா.ரஞ்சித் மற்றும் நடிகைகள் ரேவதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குநர் அமீர், ஒரு பக்கம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒரு சிறு கூட்டம் போராடுகிறது; இன்னொரு பக்கம் 'ஜன நாயகன்' திரைப்படத்தைக் காப்பாற்ற ஒரு கூட்டம் போராடுகிறது. ஆனால் இங்கிருக்கும் இந்தச் சிறு கூட்டம் அவர்களை விட அறிவார்ந்த கூட்டம் என ஆவேசமாகப் பேசினார்.
சலூட் அடித்த நடிகை அஞ்சலி: மாணவர்களின் இப்போராட்டத்திற்குத் திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு அளித்து வரும் நிலையில், நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாவில், எங்கள் குரல் உங்கள் லத்தியை விட வலிமையானது என்றும் அதிகாரத்தில் இருப்பவர்களை விட மக்களின் சக்தியே பெரியது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் இளைஞர்கள் போராடும் புகைப்படங்களைப் பகிர்ந்த அவர், "Youth of the Nation #salute #jaihind" எனக் குறிப்பிட்டு மாணவர்களின் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!


Click it and Unblock the Notifications