நரிகளின் சதிகளுக்கு நாய்கள் சாயலாம்.. ஆனால் சிங்கம் சாயாது.. குண்டு ஆர்த்தி குமுறல்!
சென்னை: கூட்டுச் சதி செய்து எங்களது அம்மாவை சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் நரிகளின் சதிகளுக்கு நாய்கள் சாயலாம், ஆனால் சிங்கம் சாயாது. கூடாரத்தை சாய்க்கலாம்.. ஆனால் ஜெயலலிதா கோட்டை. அதிலிருந்து ஒரு கல்லைக் கூட அசைக்க முடியாது என்று நடிகையும், அதிமுக பேச்சாளருமான குண்டு ஆர்த்தி கூறியுள்ளார்.
திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட குண்டு ஆர்த்தி கோபமாகவும், அதேசமயம் நிதானமாகவும் பேசினார்.

மக்கள் நலனே தன்னலன்
டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழக மக்களின் நலனே தன்னலன் என்று திட்டங்களை அறிவித்து, மக்கள் நன்றாக இருக்க வேண்டும், எல்லாரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை என்ற நிலை வர வேண்டும் என்று போராட்டமே வாழ்க்கையாக வாழ்பவர் ஜெயலலிதா.

எங்களது மகாலட்சுமி
இந்த நவராத்திரி சமயத்தில், எங்களது மகாலட்சுமியை, எங்களது துர்க்கையம்மனை, எங்களது அம்மாவை சிறையில் வைத்துள்ளதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.

என்றுமே அவர்தான் முதல்வர்
பிறக்கப் போகும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை அறிவித்து மக்களின் அன்பைப் பெற்றவர் ஜெயலலிதா. மக்களைப் பொறுத்தவரை என்றுமே அவர்தான் நிரந்தர முதல்வர்.

வயிற்றெரிச்சல்
மக்களிடம் அவர் நல்ல பெயரைப் பெற்று விட்டதைப் பொறுக்க முடியாமல் பொறாமையால், வயிற்றெரிச்சலால் அவர் மீது வீண் பழி போட்டு சிறையில் அடைத்து முடக்க நினைக்கிறார்கள்.

நாய்கள் சாயலாம்... சிங்கம் சாயாது
ஆனால் நரிகளின் சூழ்ச்சிகளுக்கு நாய்கள் சாயலாம், ஆனால் சிங்கத்தை அசைக்க முடியாது. கூடாரத்தை அசைக்கலாம். ஆனால் அம்மா கோட்டை. அதில் ஒரு செங்கல்லைக் கூட அசைக்க முடியாது.

அழிவார்கள்
எல்லோருக்கும் அவர் அம்மா, இது தமிழ்நாடு அல்ல, தாய்நாடு, அம்மா நாடு. அவரை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். இது வர லாறு.

பீனிக்ஸ் பறவை போல
10 மாதம்தான் ஒரு தாய் தனது கருவைச் சுமக்கிறாள். ஆனால் அம்மா, தனது மனதில் மக்களை குழந்தைகளாக நினைத்து நிரந்தரமாக சுமக்கிறார். ஒரு பீனிக்ஸ் பறவை போல எங்களது அம்மா மீண்டு வருவார்.

மக்களுக்காக துடிப்பார்
என்னதான் அவரைப் பாடுபடுத்தினாலும், அவரது இதயம் எப்போதும் மக்களைச் சார்ந்தே இருக்கும். மக்களுக்காகவே துடிக்கும்.

தமிழ்நாடே ஜெயலலிதாவுக்கு வாரிசு
தனக்கு வாரிசு இல்லை என்று ஜெயலலிதா கவலையேப் படவேண்டாம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் அம்மாவின் வாரிசுதான் என்றார் ஆர்த்தி.


Click it and Unblock the Notifications











