சூதாட்ட வழக்கில் பிரபல நடிகையின் கணவர் கைது
மும்பை: பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீயின் கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஹிமாலயா தசானி சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் மேனே பியார் கியா படம் மூலம் நடிகையானவர் ராஜ குடும்பத்தை சேர்ந்த பாக்யஸ்ரீ. அவர் நடிகரும், தயாரிப்பாளருமான ஹிமாலயா தசானியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மும்பை அம்போலி பகுதி போலீசார் ஹிமாலயா தசானியை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவரின் வீட்டில் வைத்து கைது செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட தசானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அம்போலி போலீசார் சூதாட்ட கும்பல் ஒன்றை அண்மையில் கண்டுபிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஒருவர் ஹிமாலா தசானிக்கும் இதில் தொடர்பு உண்டு என்று தெரிவித்தார். இதையடுத்தே தசானி கைது செய்யப்பட்டார்.
1992ம் ஆண்டு வெளியான பாயல் படம் மூலம் நடிகரானார் தசானி. தற்போது அவர் படங்களை தயாரிப்பதுடன், தொழில் அதிபராகவும் உள்ளார். பாக்யஸ்ரீ, தசானியின் மகன் அபிமன்யு அண்மையில் தான் பாலிவுட்டில் அறிமுகமானார். மர்த் கோ தர்த் நஹி ஹோத்தா என்ற அந்த படத்தில் வலியை உணர முடியாத வாலிபராக அபிமன்யு நடித்திருந்தார்.
20வது ஜியோ மும்பை திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட அந்த படத்தை பார்த்தவர்கள் வெகுவாக பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
50 வயதாகியும் பாக்யஸ்ரீ எப்படி இன்னும் அப்படியே இளமையாக இருக்கிறார் என்று வியந்து தான் அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்நிலையில் அவரின் கணவர் கைதான செய்தி வெளியானதை பார்த்த பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.


Click it and Unblock the Notifications











