''நான் பாஸ்கர் இல்லை, பாண்டி'' ஸ்டைலில் தப்ப முயன்ற புவனேஸ்வரி!

சென்னை அருகே டிரைவ் இன் தியேட்டர் ஒன்றுக்கு கும்பலோடு சென்றுள்ளார் புவனேஸ்வரி. அப்போது புவனேஸ்வரியின் கார் டிரைவர் சரியாக காரை ஓட்டாமல், தியேட்டருக்குள் போய்க் கொண்டிருந்த ஒரு காரின் பின்னால் போய் மோதி விட்டார். இதையடுத்து சேதமடைந்த காரின் உரிமையாளரான குமார் என்பவர் இதைத் தட்டிக் கேட்டபோது பெரும் வன்முறையில் இறங்கி விட்டது புவனேஸ்வரி கும்பல்.
முதலில் குமாரை அடித்தனர். அதைத் தடுக்க வந்த தியேட்டர் ஊழியரைத் தாக்கினர். தகவல் அறிந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸாரையும் தாக்கினர். அத்தோடு நில்லாமல் தியேட்டரையும் தாக்கி சூறையாடி ரவுடித்தனத்தில் ஈடுபட்டு விட்டு ஓடி விட்டனர்.
இதையடுத்து புவனேஸ்வரி உள்ளிட்ட 13 பேர் மீ்து போலீஸார் வழக்குப் போட்டனர். இதனால் பயந்து போன புவனேஸ்வரி தப்பி ஓடி தலைமறைவானார். அவர் ஆந்திரா அல்லது பெங்களூருக்கு ஓடலாம் என்று தகவல் கிடைத்ததால் போலீஸார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இதில் ஆம்பூரில் வைத்து சிக்கி விட்டார் புவனேஸ்வரி.
ஆம்பூர் அருகே கன்னிகாபுரம் என்ற இடத்தில் புவனேஸ்வரியின் கார் சென்ற போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை மடக்கினர். அப்போது காருக்குள் பம்மியிருந்த புவனேஸ்வரி கார் கண்ணாடியை மட்டும் இறக்கி விட்டு வெளியில் எட்டிப் பார்த்தாராம். உடனே போலீஸார் உங்களைக் கைது செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.
அதற்கு உடனே புவனேஸ்வரி, அய்யய்யோ அது நான் இல்லை. என் பெயர் ஷிவானி, புவனேஸ்வரி இல்லை என்று கூறினாராம். ஆனாலும் விடாத போலீஸார், கிடுக்கிப்பிடியாக செயல்பட்டு புவனேஸ்வரியை காரிலிருந்து இறக்கி அவரைக் கைது செய்து உடனடியாக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு போய் விட்டனராம்.


Click it and Unblock the Notifications











