8 பேர்.. ரூமுக்குள் அடைத்து என் அக்கா மீது பாய்ந்தார்கள்.. கேரள திரையுலகின் முகமூடியை கிழித்த நடிகை
சென்னை: ஹேமா கமிட்டி கொடுத்த ரிப்போர்ட்டால் கேரள திரையுலகம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நடிகைகளில் பலர் இயக்குநர்கள், நடிகர்களால் தங்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருப்பதாக ஓபனாகவே சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாக மலையாள சினிமா கலைஞர்கள் சங்கமான AMMA கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கிறது. சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் 30க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்த சார்மிளா கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
கேரளாவிலிருந்து சிறந்த சினிமாக்கள் வந்துகொண்டிருக்கின்றன; சிம்பிள் லைனை வைத்துக்கொண்டு புகுந்து விளையாடுகிறார்கள் என்று சமீப காலமாக பாராட்டு பத்திரங்கள் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அதற்கேற்றபடிதான் கடந்த சில காலமாகவே மலையாள திரையுலகிலிருந்து தரமான படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அவை இந்திய அளவில் நல்ல வரவேற்பையும் பெற்று; எடுத்தால் மலையாள திரையுலகம் போல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்டன.

ஹேமா கமிஷன் அறிக்கை: ஆனால் கடந்த சில நாட்களாக அந்தப் பாராட்டு பத்திரத்தின் மீது கறை படிந்து இப்போது தலைகுனிந்து நிற்கிறது கேரள திரையுலகம். அந்த மாநில அரசால் கடந்த 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி; சினிமாவில் இருக்கும் பெண் கலைஞர்களிடம் நடத்திய விசாரணையில் பலர் தங்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருப்பதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அதில் முக்கியமான இயக்குநர், நடிகர் என பலரது தலை உருளுகிறது.
ஓயாத பரபரப்பு: தினம் ஒரு தகவல் மாதிரி தினம் ஒரு பரபரப்பு அங்கிருந்து கிளம்புகிறது. இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ் உள்ளிட்டோர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பல முக்கிய நடிகர்களின் தலை இதில் உருளும் என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் கமிட்டியின் அறிக்கையிலிருந்து சில அம்சங்கள் மட்டும்தான் வெளியாகியிருக்கின்றன; முழுதாக வெளியானால் பெரும் பிரளயமே உண்டாகும் என்றும் திரைத்துறையினர் கருதுகிறார்கள்.
மோகன்லாலும் சர்ச்சையில்: முக்கியமாக AMMA தலைவராக இருந்த மோகன் லால் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். அதனையடுத்து இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று கூறினார். ஆனால் அவர் ஒரு கோழை என்று பார்வதி ஒரே போடாக போட்டார். இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியில் மோசமான சைகை செய்த மோகன் லாலின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதமானது. அதுமட்டுமின்றி மோகன் லால் மீது நல்ல அபிப்ராயம் யாருக்குமே இல்லை என்றும் மூத்த சினிமா பத்திரிகையாளர்களும் கூறிவருகிறார்கள்.
சார்மிளா பேட்டி: இந்நிலையில் மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை சார்மிளா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தமிழில் காலம் மாறிப்போச்சு என்ற படம் வந்தது. அதனை மலையாளத்தில் ரீமேக் செய்தார்கள். அதில் நான் நடித்திருந்தேன். எப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே கேட்பார்கள். ஆனால் அந்தப் படத்தில் மட்டும் முடியும் தருவாயில்தான் அந்த விஷயம் நடந்தது.
பொள்ளாச்சியில் நடந்த சம்பவம்: படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்காக ஒரு பாடலை மூன்று நாட்கள் பொள்ளாச்சியில் ஷூட் செய்தார்கள். கடைசி நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நான் கிளம்புவதாக இயக்குநரிடம் சொன்னேன். அவரும் சரி ம்மா நானும் கிளம்ப்புறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். பிறகு புரொடக்ஷன் மேனேஜரிடம் சென்று கிளம்புவதாக சொன்னேன். அவர் உடனே தயாரிப்பாளர் ரூமில் இருக்கிறார். அங்கு சென்று சொல்லுங்கள் என்றார்.
நான் எனது அசிஸ்டெண்ட்டுகளுடன் சென்றேன். அதில் எனது அக்காவும் இருந்தார். உடனே அந்த மேனேஜர் எதற்காக அசிஸ்டெண்ட்ஸ் என்று கேட்டார். எனது அசிஸ்டெண்ட்டுகளுடன் செல்வதில் என்ன பிரச்னை என்று சொல்லிவிட்டு தயாரிப்பாளர் இருந்த ரூமுக்கு சென்றேன். அங்கு அவருடன் சேர்த்து 8 பேர் குடித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் சென்றவுடனேயே ரூமை தாழிட்டு எனது அக்கா மீது பாய்ந்து புடவையை உருவினார்கள். என்னிடமும் ஒருவர் வந்தார். நான் அவரது கையை கடித்துவிட்டு தப்பித்துவிட்டேன். எனது அசிஸ்டெண்ட்களில் ஒருவரான லட்சுமணன் அவர்களை அடித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எம்.பி ஒருவரிடம் எனது உறவினர் வேலை செய்தார். அவருக்கு விஷயத்தை சொன்னவுடன் காவல் துறையினர் ஹோட்டலுக்கு வந்துவிட்டார்கள்” என்றார்.


Click it and Unblock the Notifications











