என் மகளின் மரணத்திற்கான காரணம் என்ன? போலீஸில் புகார் அளித்த நடிகை சித்ராவின் தந்தை!
சென்னை: நடிகை சித்ராவின் மரணத்திற்கான காரணம் குறித்து கண்டுபிடித்து கூறுமாறு அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா.
28 வயதாகும் சித்ராவுக்கு சமீபத்தில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஹேம்நாத் ரவி என்பவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சின்னத்திரை பிரபலங்கள்
இந்நிலையில் நடிகை சித்ரா இன்று அதிகாலை தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவின் உயிரிழப்பு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவுத் திருமணம்
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

முகத்தில் நகக்கீறல்
சடலமாக மீட்கப்பட்ட நடிகை சித்ராவின் தாடையில் இருக்கும் காயம் தூக்கு மாட்டிக்கொண்ட போது புடவையால் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அவரது முகத்தில் நகக்கீறல் எப்படி வந்தது என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரணத்தை கண்டுபிடியுங்கள்
இதனிடையே சித்ராவின் மரணம் குறித்து நசரத்பேட்டையில் அவரது தந்தை புகார் அளித்துள்ளார். சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க வேண்டும் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என சித்ராவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்ராவின் தந்தை மறுப்பு
சித்ராவின் தந்தை ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஆவார். கோட்டூர்புரம் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். போலீஸில் புகார் அளித்த கையோடு, செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் தந்தை, சித்ரா கடந்த 4ஆம் தேதி முதல் ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











