என் முடிவுக்கு யாரும் காரணமில்லை.. நடிகை பவுலின் எழுதி வைத்த கடிதம்.. சோகத்தில் குடும்பம்
சென்னை: தனது தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை என இளம் நடிகை எழுதி வைத்துள்ள கடிதம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் தீபா என்கிற பவுலின், அவருக்கு வயது 29.
அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி வாய்தா என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

துப்பட்டா மூலம் தற்கொலை
இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், தீபாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த பொழுது தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

குடும்பத்தார் அதிர்ச்சி
இதனை அடுத்து தீபாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர் நேற்று இரவு சென்னை வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை கடிதம்
மேலும், போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நடிகை பவுலின் ஜெஸிகா கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதும், அது மட்டுமின்றி அந்த கடிதத்தில் அவர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் காதல் கைக்கூடவில்லை என்றும் குறிப்பிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யாரும் காரணமில்லை
அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பவுலின் ஜெஸிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவர் வெளியிடும் இன்ஸ்டா ரீல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் பெரிதாக சாதிக்க நினைத்தவர் இப்படி காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











