நாங்கள் தாசிகளாகவே இருக்கிறோம்.. ஆனாலும் பிள்ளைகளை காப்பாற்றுகிறோம்.. நடிகை அதிரடி
சென்னை: கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க குணசித்திர நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் தீபா. ஏராளமான படங்களை அவர் தற்போது கைவசம் வைத்திருக்கிறார். வெகுளித்தனமான பேச்சும், நடிப்பும் அவருக்கு பக்க பலமாக இருக்கின்றன. கடைக்குட்டி சிங்கம், டாக்டர் என தான் நடிக்கும் படங்களில் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் தீபா நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் பற்றியும், நடிகைகள் பற்றியும் பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றிருக்கிறது.
மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தீபா சங்கர். அந்தப் படத்தில் மணிவண்ணனுக்கு மகளாக நடித்திருந்த அவர் அடுத்ததாக வெடிகுண்டு முருகேசன் படத்தில் நடித்தார். 2009ஆம் ஆண்டு இந்த இரண்டு படங்களும் வெளியாகின. இரண்டு படங்களிலுமே அவருக்கு பெரிய ரோல்கள் எதுவும் கிடைக்காததால் பட வாய்ப்புகள் இல்லாமல் காத்திருந்தார். அந்தச் சமயத்தில் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருந்தார் அவர். இதனையடுத்து 2016ஆம் ஆண்டு கிடாரி படத்தின் மூலம் அவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைத்தது.

வளர்ச்சியடைந்த தீபா: தனது இரண்டாவது இன்னிங்ஸில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பலனாக அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி செம, கடைக்குட்டி சிங்கம், மகாமுனி, நம்ம வீட்டுப்பிள்ளை, சில்லுக்கருப்பட்டி, டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவரது நடிப்பில் வா வரலாம் வா வெளியானது. அடுத்ததாக இந்தியன் 2 படம் ரிலீஸாகவிருக்கிறது.
கவனம் ஈர்த்த தீபா: அவர் நடித்த படங்களில் கடைக்குட்டி சிங்கம் சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. கோயிலில் கார்த்தியிடம் அழும் காட்சியில் தீபா ஒட்டுமொத்த அப்ளாஸையும் அள்ளினார். அதேபோல் சிவகார்த்திகேயனுடன் நடித்த டாக்டர் படத்தில் காமெடி ரோல் ஏற்று அதிலும் அதகளம் செய்திருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பெண்கள் குறித்து பேசியது ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றிருக்கிறது.
தீபா பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய அவர், "எங்களை யாரேனும் ஏமாற்றிவிட்டால்கூட அவன் இன்னைக்கு வருவான் நாளைக்கு வருவான் என்று காத்துக்கொண்டு இருக்க வேண்டுமா.. நாங்கள் மனித பிறவிகள் கிடையாதா?.. எங்களுக்கு உணர்வுகளோ, உணர்ச்சிகளோ கிடையாதா?.. ஆண்களுக்கு மட்டும்தான் எல்லாம் இருக்க வேண்டுமா?.. கணவர் அடித்தால் வெளியே சொல்லாதே, காவல் நிலையத்துக்கு போனால் அவமானம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். என்னை மாதிரி நடுத்தர வாழ்க்கை வாழும் பெண்களுக்காகத்தான் நான் பேசுகிறேன்.
பட்டம் சூட்டுகிறார்கள்: இளம்வயதில் கணவரை இழந்த ஒரு பெண் யாருடனாவது போய்விட்டால் அவருக்கு ஒரு பட்டம் சூட்டி வாழ்க்கையை முடித்துவிடுகிறார்கள். நீங்கள் நான்கு பேர் சேர்ந்து அவருக்கு மறுமணம் செய்து வையுங்களேன். ஏன் அதை செய்யவில்லை. நாங்கள் பாட்டு பாடக்கூடாது, ஆடக்கூடாது, ஓடக்கூடாது, சிரிக்கக்கூடாது. இதெல்லாம் உங்களுக்கு கௌரவ குறைச்சல். சின்ன சின்ன ஆசைகள் எங்களுக்கும் இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா?
நாங்கள் தாசிகள்தான்: நாங்கள் தாசிகள் என்றே வைத்துக்கொள்வோம். அந்த நிலைக்கு அப்படி மாற்றிய நீங்கள் யார். ஊரில் கரகாட்டக்காரியை ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார். நாங்கள் தாசிகளே ஆனாலும் நடித்து எங்கள் பிள்ளைகளை காப்பாற்றிவருகிறோம். உங்களைப் போல் குடித்துவிட்டு ஊரை அழிக்கவில்லையே. யார் குடும்பத்தை கவனிக்கவில்லையோ, பெண்களை மோசமான நிலைமைக்கு தள்ளுகிறானோ அவனைத்தான் சொல்கிறேன். இவர்கள் எல்லாம் மனிதர்களே கிடையாது.
பெண்கள் என்றால் இளக்காரமா?: பெண்கள் இளக்காரமாக போய்விட்டார்களா. எவ்வளவு கஷ்டப்பட்டு பெண்களை பாதுகாக்கிறோம். வேலைக்கு செல்ல வேண்டும், குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது எப்போது வேண்டுமானாலும் காதல் வரலாம். அது தவறே இல்லை. அது எனக்கும் என்னை நேசிப்பவருக்கும் இடையே உள்ள விஷயம். அதை வைத்து எனது கேரக்டரை தீர்மானிக்கக் கூடாது" என்றார்.


Click it and Unblock the Notifications











