கமல்ஹாசன் படங்கள் குறித்து தேவயானி புருஷன் என்ன இப்படி சொல்றாரு.. ஆரம்பித்த புது பஞ்சாயத்து!
சென்னை: கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் ராஜகுமாரன். இவர் இயக்குநர் விக்ரமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இவரது இயக்கத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், சிவராம், திருமதி தமிழ் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளது. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் உலகநாயகன் கமல்ஹாசன் குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதாவது, தமிழ் சினிமாவில் தற்போது மார்க்கெட்டில் டாப்பில் இருப்பவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். இவர் தான் ஒரு படத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்ற புரிதலுடன் படத்தை கட்டமைத்து வெளியிடுகிறார். இது ஏதோ ஒரு படத்திற்கு மட்டும் செய்வது கிடையாது. இதை அவர் தனது ஒவ்வொரு படத்திற்கும் செய்து வருகிறார். இது சாதாரண விஷயம் கிடையாது. சினிமாவில் வெற்றிக்கான நுணுக்கங்களையும் தான் இருக்கும் துறைக்கான ஒழுங்கையும் அவர் கண்டுபிடித்துவிட்டார்.
சிவகார்த்திகேயன் தனது கெரியரை தொடங்கி சில படங்களில் இருந்து நான் அவரை கவனித்து வருகிறேன். அவருக்கு மெசேஜ் அனுப்பும் போது எல்லாம் சூப்பர் ஸ்டார் என்றுதான் அனுப்புவேன். அவரது படங்கள் என்றால் குடும்பத்துடன் தைரியமாக சென்று பார்க்கலாம் என்ற தரத்தில் உள்ளது. இதுவே மற்ற நடிகர்கள் படங்கள் என்றால் அப்படி இருப்பதில்லை. மற்ற நடிகர்கள் படம் என்றால், இந்த படத்திற்கு போகலாமா? வேண்டாமா? படம் நன்றாக இருக்குமா? இருக்காதா? குடும்பத்துடன் பார்க்கலாமா? அல்லது குழந்தைகளுடன் பார்க்க இது ஏதுவான படமா? என்ற பல கேள்விகள் முன் வருகிறது.

சர்ச்சை கருத்து: ஆனால் சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் இப்படியான கேள்விகள் வருவதில்லை. சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே தைரியமாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்றுதான் தோன்றுகிறது. இந்த எண்ணம் மற்ற நடிகர்கள் மீது வருவதில்லை. கமல் சார் படங்களே பார்க்கும்போது சலங்கை ஒலி மாதிரியான படங்கள் பார்க்கும்போது மிகவும் நன்றாக உள்ளது. அதுவே அவரது வேறு சில படங்களுக்கு போனால் முகத்தை மூடிக்கொண்டு தான் வரவேண்டும் " என்று பேசியுள்ளார்.
சினிமா பல்கலைக்கழகம்: இயக்குநர் ராஜகுமாரனின் இந்த பேச்சு கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் சினிமா ரசிகர்கள் பலரும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் முகம். அவர் தனது 5 வயதில் இருந்து தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கி, கடந்த சில தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் முகமாக உள்ளார். இன்னும் சொல்லப்போனால் நடமாடும் சினிமா பல்கலைக் கழகமாக உள்ளார்.

மோசமான படம்: இவரது திரை வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கம் இருந்துள்ளது. ஆனால் அவரது படங்கள் தமிழ் சினிமாவிற்கு பால் படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்துள்ளது. இன்றைக்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எடுக்க காரணம் கமல்ஹாசனின் தெனாலி படம் தான் என்று பேட்டியில் கூறியுள்ளார். இப்படி பல ஆயிரக்கணக்கான உதாரணங்களை எடுத்துச் சொல்ல முடியும். ஆனால் முகத்தை மூடிக்கொண்டு வரும் அளவிற்கு கமல்ஹாசன் என்ன படத்தில் நடித்தார், அல்லது என்ன படம் கொடுத்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











