கௌரவமாவது, மண்ணாங்கட்டியாவது.. ரிதன்யா தற்கொலை.. உச்சக்கட்ட கொதிப்பில் பிரபல நடிகை ஓபன் டாக்
சென்னை: திருப்பூரை சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வரதட்சணை கேட்டு மாமியார் வீட்டில் கொடுமைப்படுத்தியதால் அவர் இந்த துயரமான முடிவுக்கு வந்திருக்கிறார். அவரது மரணம் பலரையும் கொதிப்படைய செய்திருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை கேப்ரியல்லாவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா (27). ரிதன்யாவை அதே மாவட்டத்தை சேர்ந்த கவின் குமார் என்பவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். கவினின் குடும்பம் வசதியான குடும்பம் என்றே தெரிகிறது.மேலும் ரிதன்யா குடும்பத்தினர் திருமணத்துக்கு மொத்தம் 300 சவரன் நகையும், சொகுசான வால்வோ காரையும் வரதட்சணையாக கொடுத்தார்கள் என்று தெரிகிறது.
வீட்டுக்கு வந்த ரிதன்யா: திருமணமாகி இரண்டே வாரங்கள் ஆன சூழலில் ரிதன்யாவை அவரது வீட்டுக்கே கவின் குமார் அழைத்து வந்து விட்டிருக்கிறார். பிறகு சமாதானம் செய்து மீண்டும் கவினின் வீட்டுக்கு ரிதன்யா அனுப்பப்பட; மீண்டும் சில நாட்கள் கவினுடன் ரிதன்யா நிம்மதியாக இருந்திருக்கிறார்.ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதுபோல் அண்ணாதுரை வீட்டிலேயே தனது மனைவியை விட்டு சென்றார் கவின்.
தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா: இந்த முறையோ ரிதன்யா தனது தந்தையிடம் எதையும் என்னிடம் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்திருக்கிறார். அதனையடுத்து அருகில் இருக்கும் கோயிலுக்கு செல்வதாக சொல்லி சென்ற ரிதன்யா காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக அவர் தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜ் ரொம்பவே உருக்கமாக இருந்தது.

ரிதன்யா பேசியது: அவர் அந்த மெசேஜில், "நான் தற்கொலை செய்துகொள்ள காரணமே திருமண வாழ்க்கைதான். கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவிதான் இதற்கு காரணம்" என்று அழுதுகொண்டே குறிப்பிட்டிருந்தார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மட்டுமின்றி இரவில் உடல் ரீதியாக கவினும் ரிதன்யாவை டார்ச்சர் செய்ததாக தெரிகிறது.
தந்தையின் சர்ச்சை பேச்சு: ரிதன்யா தற்கொலையை அடுத்து கவின், ஈஸ்வரமூர்த்தி ஆகிய இரண்டு பேருமே அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள். சித்ரா தேவி விரைவில் கைதாகவிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க ரிதன்யாவின் தந்தையோ, 'ஒருத்தனுக்கு ஒருத்தி என்று எனது மகள் உயிரை விட்டிருக்கிறார். மகளை இழந்திருந்தாலும் அதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது' என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்தப் பேச்சை கேட்ட மக்களோ,'இப்படி ஒரு தந்தை பேசலாமா?.. ரிதன்யாவுக்கு தனது தந்தை மீதும் நம்பிக்கையில்லை என்பது அண்ணாதுரையின் பேச்சிலேயே தெரிகிறது. அவர் மட்டும் நம்பிக்கை கொடுத்திருந்தால் கண்டிப்பாக ரிதன்யா தற்கொலை செய்திருக்கமாட்டார்' என்றெல்லாம் விளாச தொடங்கினார்கள்.
கேப்ரியல்லா கொதிப்பு: இப்படி பலரும் ரிதன்யாவுக்காக குரல் உயர்த்த ஆரம்பித்திருக்கிறார். இயக்குநர் வசந்தபாலனும் ஆதங்கத்துடன் முகநூலில் போஸ்ட் போட்டிருந்தார். இந்நிலையில் சீரியல் நடிகை கேப்ரியல்லா இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பெண் குழந்தையை பெற்ற தாயாக சொல்கிறேன். ரிதன்யா மரண செய்தி காலம் மாறிக்கொண்டு வருகிறது என்று நம்பிய எல்லோருக்கும் ஒரு கொடுமையான ஏமாற்றம். நிரந்தரம் இல்லாத பணத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு ஒரு பெண் வெறுத்து இறக்கிறார் என்றால் அதற்கு தூண்டுதலான அந்த மனிதர்களின் அழிவுக்கு இந்த விதி பொறுப்பு.
எந்தப் பதிவு போட்டாலும் அந்த துடித்து இறந்த பாப்பா மீண்டும் வரமாட்டார். உயிருக்கு சில மனிதர்கள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான். நமது பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும்போது, 'அப்புறம் பொண்ணுக்கு என்ன செய்வீர்கள்' என்று கேட்டால்; அடுத்த நிமிடமே வாசலை கை காட்டிவிடுங்கள். கௌரவம், மண்ணாங்கட்டியையெல்லாம் கரைய வைக்க நாம் இனிமேல் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











