கொலை மிரட்டல்.. உயிருக்கு அச்சுறுத்தல்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பிரபல நடிகை பரபரப்பு புகார்!
சென்னை: தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரபல நடிகை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் சார்பில் நடைபெற்ற சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
குறிப்பாக அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்திருந்தார். தொல்லியல்துறை நடத்திய ஆராய்ச்சியில் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்றும் விமர்சித்திருந்தார். அதற்கான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

காயத்ரி ரகுராம் கண்டனம்
இதற்கு நடிகையும் நடன இயக்குநரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார்.

டிவிட்டர் கணக்கு முடக்கம்
இதற்காக அவரது வீட்டின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரது டிவிட்டர் கணக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டது.

புகார் மனு
இந்நிலையில் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார் நடிகை காயத்ரி ரகுராம். பின்னர் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார் காயத்ரி ரகுராம்.

கொலை மிரட்டல்கள்
அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் போன் மூலமாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய வீட்டிற்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

விசிகவினர் மீது புகார்
ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்தது தொடர்பாக அக்கட்சியினர் காயத்ரி ரகுராம் மீது கடலூர் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் விசிகவினர் மீது காயத்ரி ரகுராம் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











