இதுதாங்க பெரிய கிஃப்ட்.. கணவருடன் இணைந்து உடல் உறுப்புதானம் செய்த பிரபல நடிகை..பாராட்டும் ஃபேன்ஸ்!
மும்பை: பிரபல நடிகை தனது கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். இதையடுத்து அவர்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா.
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர், பிரபல இந்தி நடிகரும் மகாராஷ்ட்ரா மாநில முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிப்பை நிறுத்தினார்
இவர்கள் திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு ஜெனிலியா நடிப்பதை நிறுத்தி விட்டு, குழந்தைகளைக் கவனித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் ஜெனிலியா.

உடல் உறுப்புதானம்
ரிதேஷூம் அவரும் இணைந்து அவ்வப்போது ஜாலியான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பழைய பாடல்களுக்கு டிக் டாக் செயலியில் நடித்தும் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அவரும் அவர் கணவரும் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தாங்கள் உடல் உறுப்புதானம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

மிகப்பெரிய பரிசு
உடல் உறுப்புத்தானம் செய்வது பற்றி நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் தள்ளிக்கொண்டே போனது. இன்று (நேற்று) மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு எங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த டாக்டர் நோசர் ஷெரீயருக்கு நன்றி. நீங்கள் யாருக்காவது கொடுக்கின்ற மிகப்பெரிய பரிசு, வாழ்க்கைதான். உறுப்பு தானம் செய்யுங்கள். இவ்வாறு கூறியுள்ளனர்.

முன்னுதாரணம்
இதற்கு ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. சிறந்த முடிவை எடுத்துள்ளீர்கள். இதன் மூலம் பலருக்கு நீங்கள் முன்னுதாரணமாகவும் இருக்கிறீர்கள் என்று பல நெட்டிசன்கள் கூறியுள்ளனர். சில சினிமாதுறையினரும் அவர்களை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











