கேவலம்.. சாக்கடைத்தனம்.. கௌரி கிஷனுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட பா. ரஞ்சித் - குஷ்பு!
சென்னை: 96 படத்தின் ப்ளாஷ் பேக் போர்ஷனில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி கிஷன், யூடியூபரைப் போட்டு விளாசி விட்டதுதான் தற்போது டாக் ஆஃப் தி சிட்டியாக உள்ளது. பொறுப்பற்ற முறையில் கேள்வி கேட்டது மட்டும் இல்லாமல், அந்த கேள்வியை நியாயப்படுத்திய யூடியூபருக்கு தக்க பதிலடி கொடுத்தார் நடிகை கௌரி கிஷன். தற்போது கௌரி கிஷனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் கௌரி கிஷனைப் பாராட்டியும் அந்த யூடியூபரை கண்டித்தும் பதிவிட்டுள்ளார்.
அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது யூடியூபர் ஒருவர், ஏற்கனவே நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தான் எழுப்பிய கேள்வியில் எந்த தவறும் இல்லை என்று வாதிட்டார். அதாவது, அவர் நடிகரை நோக்கி நடிகையை தூக்கி உள்ளீர்கள், நடிகையை எடை எவ்வளவு என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கௌரி கிஷன் கண்டித்துப் பேச, அதை குறிப்பிட்டு இங்கு கேள்வி எழுப்பினார் அந்த யூடியூபர்.
அவர் அவ்வாறு கேள்வி எழுப்பியது மட்டும் இல்லாமல், தான் விளையாட்டுக்குத்தான் கேள்வி கேட்டேன், சினிமா நடிகர்கள் மற்றும் நடிகையிடம் இந்திய பொருளாதாரம், உலக அரசியல் குறித்தா கேள்வி எழுப்ப முடியும் என்று கேட்டு தான் கேட்ட கேள்வி சரி என்று வாதிட்டார்.. மேலும் கௌரி கிஷன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறினார்.

முட்டாள்தனமான கேள்வி: அந்த யூடியூபரின் கேள்விக்கு ஆதரவாக மற்றொருவர் பத்திரிகையாளர் தரப்பில் இருந்து குரல் கொடுத்தார். ஆனால், கௌரி கிஷனுக்கு ஆதரவாக அங்கு எந்த குரலும் இல்லை. கௌரி கிஷன் அளித்த பதிலில், " நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் முட்டாள் தனமான கேள்வி. எனது எடையைத் தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். எனது எடைக்கும் இந்த படத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது. யார் இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்பது இயக்குநரின் தேர்வு. எடை குறித்த கேள்விகள் ஏன் எப்போதும் நடிகைகளை நோக்கியே இருந்து வருகிறது? எனக்கு என்னென்ன பிரச்னைகள் உடல் சார்ந்து இருக்கிறது என்று தெரியுமா?
தில்லான பதிலடி: அதர்ஸ் படத்தில் எனது கதாபாத்திரம் குறித்த கேள்விகள் எதுவும் என்னிடத்தில் கேட்கப்படவில்லை, எனது கதாபத்திரத்திற்காக நான் என்ன முயற்சி எடுத்தேன் என்ற கேள்வியும் என்னை நோக்கி எழுப்பப்படவில்லை. மாறாக எனது உடல் எடை குறித்த கேள்வியை நடிகரிடத்தில் மறைமுகமாக கேட்டதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அதற்கும் இந்த படத்தின் கதைக்கும் என்ன தொடர்பு உள்ளது? உங்கள் கேள்வி தவறு, அது ஒரு முட்டாள்தனமான கேள்வி, நான் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது" என்று செம தில்லாக பதிலடி கொடுத்தார். தற்போது கௌரி கிஷனுக்கு ஆதரவாக குரல்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. ஏற்கனவே பாடகி சின்மயி, நடிகர் கவின் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
பா. ரஞ்சித்: தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்டவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், " கௌரி கிஷன் நான் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். அந்த நிரூபரின் செயலும் கேள்வியும் வன்மையாக கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது. நடிகைகள் இன்னும் இந்த அநாகரீகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

குஷ்பு: அதேபோல் நடிகை குஷ்பு, " பத்திரிகைத்துறை தனது தரத்தை இழந்துவிட்டது. சில பத்திரிகையாளர்கள் ஜெர்னலிசத்தை சாக்கடைக்கு இழுத்துச் செல்கிறார்கள். ஒரு நடிகையின் எடை எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்வதா அவர்களின் வேலை? இந்த கேள்வியை கதாநாயகர்களிடம் கேட்பார்களா? இதெல்லாம் அவமானம். தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பதிலடி கொடுத்த கௌரி கிஷனுக்கு வாழ்த்துகள். மரியாதை என்பது ஒருவழிப்பாதை இல்லை, உங்களுக்கு மரியாதை தேவை என்றால் அதை கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள் " என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











