கொரோனா 3வது அலை.. குழந்தைகளுக்காக பிரத்யேக வார்டு தயார் செய்யும் ரஜினி பட நடிகை!
சென்னை: கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் காலா பட நடிகை குழந்தைகளுக்காக பிரத்யேக வார்டு தயார் செய்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று உலகம் முழுவதையும் வாட்டி வதைத்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில் முதல் அலையை காட்டிலும் உயிரிழப்பு அதிகரித்தது.

குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்
இந்நிலையில் தற்போதுதான் கொரோனா இரண்டாவது அலை குறைய தொடங்கியுள்ளது. இதனிடையே அடுத்து கொரோனா மூன்றாவது அலை தொடங்கும் என்றும் அதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பிரத்யேக வார்டு
கொரோனா இரண்டாவது அலையால் தலைநகர் டெல்லி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் நடிகை ஹூமா குரேஷி குழந்தைகளுக்கான பிரத்யேக வார்டை தயார் செய்து வருகிறார்.

காலா படத்தின் மூலம்..
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய 'கேங்ஸ் ஆக் வாஸிப்பூர்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹூமா குரேஷி. ரஜினிகாந்த் உடன் 'காலா' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

குழந்தைகளுக்காக..
தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் 'வலிமை' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்காக டெல்லியில் குழந்தைகளுக்கான பிரத்யேக கொரோனா வார்டு ஒன்றை அமைக்க ஹூமா குரேஷி திட்டமிட்டுள்ளார்.

சுவரில் கார்ட்டூன்
இதற்கு ப்ரீத் ஆஃப் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வார்டில் சுமார் 30 படுக்கையறைகள் அமைக்கப்படுகிறது. குழந்தைகளை கவரும் வகையில் சுவரில் கார்ட்டூன் படங்கள் வரையப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் வரவேற்பு
கொரோனா இரண்டாவது அலையின் போது 100 ஆக்ஸிஜன் படுக்கைகளை கொண்ட தற்காலிக மருத்துவமனையை அமைத்தார் நடிகை ஹூமா குரேஷி. இந்நிலையில் தற்போது குழந்தைகளுக்கான கொரோனா வார்டை அமைக்க உள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











