‘எனது வீட்டை சூனியம் வைத்து அபகரிக்க முயற்சி’.. நடிகை ஜெயசித்ரா பரபரப்பு புகார்
சூனியம் வைத்து தனது வீட்டை அபகரிக்க முயற்சி நடக்கிறது’ என்று நடிகை ஜெயசித்ரா கூறினார்.
சென்னை : சூனியம் வைத்து தனது வீட்டை அபகரிக்க அதில் குடியிருக்கும் நபர் முயற்சிப்பதாக நடிகை ஜெயசித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை ஜெயசித்ரா. அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தவர்.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம் பாஸ்கர தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ள ஜெயசித்ரா, அந்த வீட்டை மீட்க பல ஆண்டுகளாக நீதிமன்றம் மூலம் போராடி வருகிறார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கார் புரோக்கர்:
சினிமா பைனான்சியர் அசோக் லோதா என்பவர் சென்னை யானைக்கவுனி போலீஸ்நிலையத்தில் தன்னை கார் புரோக்கர் இளம்முருகன் என்பவர் காசோலை கொடுத்து மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார்.

கைது:
அந்த புகாரில் என்னிடமும், இன்னொரு நடிகரிடமும் இளம்முருகன் மோசடி செய்திருந்தார் என்று கூறியிருந்தார். போலீசார் விசாரித்து இளம்முருகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

வாடகையாளர்:
என்னிடம் இளம்முருகன் மோசடி செய்தது உண்மை தான். எனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்தார். சென்னை ரங்கராஜபுரத்தில் 750 சதுரடியில் எனக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டில் இளம்முருகனும், அவரது மனைவி மீனா இளம்முருகனும் வாடகைக்கு இருந்தனர்.

வாடகை பாக்கி:
12 ஆண்டுகளாக எனக்கு வாடகை தராமல் ஏமாற்றினார்கள். வீட்டையும் காலி செய்ய மறுத்தனர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, குறிப்பிட்ட தொகையை வாங்கினேன். இன்னும் ரூ.7 லட்சம் பாக்கி உள்ளது.

கெடு:
இளம்முருகன் வீட்டை காலி செய்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் அவர் காலி செய்யவில்லை. எனக்கு வங்கி மூலம் பணம் தந்ததாக நீதிமன்றத்தையும் அவர் ஏமாற்றினார். வருகிற 20-ந்தேதி வரை அவருக்கு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அதன்பிறகும் காலி செய்யாவிட்டால் பூட்டை உடைத்து உள்ளே செல்லலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சூனியம்:
இளம்முருகனால் நான் பெரியளவில் மனஉளைச்சலுக்கு ஆளானேன். அந்த வீட்டை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்காக எனக்கு எதிராக வீட்டை சுற்றி சூனியம் வைக்கப்பட்டது. வீடும் சேதப்படுத்தப்பட்டது. நீதிமன்றம் மூலம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











