ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும்..சினேகன் மீது பாய்ந்த நடிகை ஜெயலட்சுமி.. பூதாகரமாகும் பிரச்சனை!
சென்னை : சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி, என் மீது சினேகன் கூறிய குற்றச்சாட்டுக்கு 7 நாட்களுக்குள் விளக்கமளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிகை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

சினேகன் அறக்கட்டளை
சினேகன் அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருவதாகவும், ஆனால் சமீப காலமாக இணைய தளத்தில் தனது பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும், சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் பணம் கேட்டு வருவதாக தெரிவித்தனர்.

எந்தவித பதிலும் இல்லை
மேலும், அதற்கடுத்த சில தினங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் பணம் பெறுவதால் தன்னிடம் விசாரணை செய்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள முகவரியை இரண்டு முறை சட்டபூர்வமாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும், எந்தவித பதிலும் தரவில்லை.

காப்பி சாப்பிடலாம் வாங்க
அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது ஜெயலட்சுமி தன்னை பொதுவெளியில் சந்திக்க வேண்டும் என கூறியதாகவும், ஒரு காப்பி சாப்பிடலாம் வாங்க என அழைப்பதாகவும் சினேகன் ஜெயலட்சுமி மீது புகார் கூறியிருந்தார். மேலும், எனது பெயரை பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சட்டரீதியான நடவடிக்கை
இந்நிலையில்,தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி, கவிஞர் சினேகனின் என் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு 7 நாட்களுக்குள் ஆதாரத்தோடு விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் அப்படி தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். சினேகன் கூறும் குற்றச்சாட்டை போல் அவர் தரப்பிலிருந்து எனக்கு எந்த விதமான தொலைபேசி அழைப்போ கடிதமோ வழக்கறிஞர் மூலமாக மனுவோ என எதுவும் வரவில்லை என்றார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்வதால் பிரச்சனை பூதாகரமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











