நடிகர் சங்க தேர்தல்.. பிரகாஷ் ராஜ் உடன் மோதும் பிரபல 80ஸ் கதாநாயகி.. வெல்லப்போவது யாரு?
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜை எதிர்த்து பிரபல நடிகை ஒருவர் போட்டியிட களமிறங்கி உள்ளார்.
தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் நிர்வாகிகள் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய நடிகர் சங்க நிர்வாகிகளை நிர்வகிக்க அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு உள்ளிட்டோர் ஏற்கனவே தலைவர் போட்டியில் இருக்கும் நிலையில், நடிகை ஜீவிதாவும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார்.

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்
தெலுங்கு திரையுலகிற்கான நடிகர் சங்க தலைவராக செயலாற்றி வரும் நரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிதாக நிர்வாகிகளை நியமிக்க தெலுங்கு நடிகர் சங்க தேர்தலை விரைவாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பிரகாஷ் ராஜ் போட்டி
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த தேர்தலில் தலைவர் பதவியை குறிவைத்து போட்டியிடுகிறார். பிரகாஷ் ராஜை எதிர்த்து இந்த தேர்தலில் மேலும் இருவர் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.

விஷ்ணு மஞ்சு
நடிகர் பிரகாஷ் ராஜை எதிர்த்து மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்கு இந்த நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார். பிரகாஷ் ராஜுக்கும் விஷ்ணு மஞ்சுவுக்கும் இடையே தான் பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்த்த நிலையில், மூன்றாவதாக பிரபல நடிகை ஜீவிதா களத்தில் குதித்துள்ளார்.

ஜீவிதா அதிரடி
டாக்டர் ராஜசேகர் மனைவியும் நடிகையுமான ஜீவிதாவும் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட களமிறங்கி உள்ளது டோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தர்ம பத்தினி, உறவை காத்த கிளி உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ்ப் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார் ஜீவிதா.

ஏற்கனவே வெற்றி
கடந்த நடிகர் சங்க தேர்தலில் நடிகர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் நடிகை ஜீவிதா. அவரது கணவர் டாக்டர் ராஜசேகர் துணை தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர். இந்நிலையில், இந்த முறை நடிகர் சங்க தேர்தல் மும்முனைப் போட்டியாக கடும் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











