நான் கவர்ச்சி நடிகை தான்.. என்னை புடவையில் அழகு பார்த்தவர் அவர்.. மனம் திறந்து பேசிய நடிகை!
சென்னை: சினிமா, சீரியல்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக நடித்து பெயர் எடுத்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை கே.எஸ்.ஜெயலட்சுமி. இவர் கே பாலச்சந்தர் இயக்கிய திரைப்படத்தில் பல நல்ல கதாபாத்திரத்தில் நடித்து, அவருக்கு பிடித்தமான நடிகைகளில் ஒருவராக இருந்தார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் அவர் கடந்து வந்த பல விஷயத்தை பற்றி பேசி உள்ளார்.
அதில், நான் ஐந்து வயதாக இருக்கும்போதே நாடகம் ஒன்றில், சங்கே முழங்கு பாடலுக்காக ஆடி இருக்கிறேன். அதில், இருந்து தான் எனது நாடகப் பயணம் தொடங்கியது. கே.பாலச்சந்தர் சாரும் நாடகத்துறையில் இருந்து தான் வந்ததால், நாடகத்துறையில் இருந்து வந்த என் மீது, அவருக்கு தனி அக்கறை உண்டு. பாலச்சந்தரின் அக்னிசாட்சி, பொய் கால் குதிரை, மனதில் உறுதி வேண்டும், காதலே நிம்மதி, உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள், கல்கி என பல திரைப்படத்தில் நடித்து இருக்கிறேன்.

நடிகை கே.எஸ்.ஜெயலட்சுமி: புன்னகை மன்னன் திரைப்படத்தில் ரேவதிக்கு அம்மாவாக நடித்திருந்தேன். அதுதான் நான் முதல் முதலாக அம்மா ரோலில் நடித்த திரைப்படம். அப்போது டப்பிங் பேச சென்ற போது, நீ ரேவதிக்கு அம்மாவா? இவ்ளோ சின்ன வயதில் அம்மாவா நடிக்கிறியே? பார்ப்பதற்கு ரேவதியும் நீயும் ஒரே மாதிரிதான் இருப்பீங்க என்று கேட்டார், அப்போது நான், பாலச்சந்தர் சார் சொன்னாரு அதற்காக நடிக்கிறேன். எந்த ரோல் யாருக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு நன்றாக தெரியும் என்றேன்.

கவர்ச்சி நடிகை: தொடர்ந்து பேசிய நடிகை ஜெயலட்சுமி, நான் சினிமாவில் முதன் முதலில் கவர்ச்சி நடிகையாகத்தான் நடித்தேன். அதன் பிறகு வந்த அனைத்து வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரமாகவே வந்தன. ஆனால் கே பாலச்சந்தர், அவர்கள் தான் என்னை அழைத்து எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார். அதுவரை கவர்ச்சி நடிகையாக இருந்த என்னை புடவை கட்டி அழகு பார்த்தவர் கே பாலச்சந்தர் சார் தான். அதன் பிறகு அவரின் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். எஸ் பி முத்துராமன் கூட, என்னிடம் ஒருமுறை எங்களுக்கெல்லாம் கிளாமரா தெரிஞ்ச ஜெயலட்சுமி, பாலச்சந்தருக்கு மட்டும் புடவையில் பார்க்க வேண்டும் என்று தோன்றியது என்று கேட்டார் என ஜெயலட்சுமி அந்த பேட்டியில் கூறிள்ளார்.

நடிகை டூ வில்லி: சினிமா, சீரியல்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லி ரோல்களில் நடித்து புகழ் பெற்ற கே.எஸ்.ஜெயலட்சுமி. கன்னட சினிமாவில் ஒரு படத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக மாறினார். அதன் பிறகு எதற்கும் துணிந்தவன் படத்தில் சிவக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். திருமணத்திற்கு பிறகு படங்களில் சான்ஸ் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் வந்த ஜெயலட்சுமி, ராதிகா சரத்குமார் இயக்கிய சித்தி, அலைகள், அண்ணாமலை போன்ற சீரியல்களில் நடித்தார். மேலும், மனைவி, லட்சுமி, அத்திப்பூக்கள், உறவுகள், வள்ளி, பொன்னூஞ்சல், பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மன்னன் மகள், சந்திரலேகா, வம்சம், துளசி கணக்கில் அடங்காத சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக துளசி சீரியல் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. சினிமாவைவிட சீரியல் மூலம் இல்லத்தரசிகளில் மனதில் இடம் பிடித்த ஜெயலட்சுமி, சன்டிவியின் பாண்டவர் இல்லம் சீரியலிலும், ஜீ தமிழின் புது புது அர்த்தங்கள் சீரியலிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











