சந்திரமுகி 2 செட்டிலிருந்து அழுதபடி வெளியேறிய கங்கனா - காரணம் தெரியுமா?
ஹைதராபாத்: சந்திரமுகி 2 செட்டிலிருந்து நடிகை கங்கனா ரணாவத் அழுதபடி வெளியேறிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 800 நாள்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. அந்தப் படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் அமர்ந்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரஜினிக்கு மறுவாழ்வு கொடுத்த சந்திரமுகி
ரஜினிகாந்த் கதை, திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் பாபா. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் ரஜினியின் கேரியரில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் ரஜினிக்கு பெரும் நெருக்கடியும் உருவானது. இப்படிப்பட்ட சூழலில் பி.வாசு சந்திரமுகி கதையுடன் ரஜினியிடம் சென்றார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் அதில் ரஜினி நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகி ரஜினிக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தது.

சந்திரமுகியாக நடித்து மிரட்டிய ஜோதிகா
படத்தின் வெற்றிக்கு பாடல்கள், வடிவேலுவின் காமெடி எல்லாம் உதவின. இருப்பினும் படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது ஜோதிகாவின் நடிப்பை. கங்கா என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக இருக்கும் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். சந்திரமுகியாக அவர் காட்டிய முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என அனைத்தும் ஜோதிகா எனும் மிகச்சிறந்த நடிகையை நீண்ட நாள்கள் கழித்து ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

சந்திரமுகி 2-வை இயக்கும் பி.வாசு
இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. இப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் ஜோதிகா நடித்திருந்த நடிப்புக்கு ஈடாக கங்கனா இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

சந்திரமுகி 2 ஷூட்டிங்கை முடித்த கங்கனா
சூழல் இப்படி இருக்க சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங்கை கங்கனா ரணாவத் முடித்திருக்கிறார். இதனையடுத்து ஷூட்டிங்கை முடித்து சந்திரமுகி 2 செட்டிலிருந்து கங்கனா அழுதபடி வெளியேறும் வீடியோவை படக்குழு பகிர்ந்திருக்கிறது. மேலும் கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், "சந்திரமுகி படத்தில் நான் எனது கதாபாத்திரத்தை முடிக்கவிருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் ராகவா லாரன்ஸுடன் எப்போதும் புகைப்படம் எடுத்ததில்லை. ஏனென்றால் நாங்கள் எப்போதும் திரைப்படத்திற்கான காஸ்டியூமில் இருப்போம். அதனால் கடைசி நாள் காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே புகைப்படம் எடுக்க கோரினேன்.

ராகவா லாரன்ஸ் ஒரு சூப்பர் ஸ்டார்
லாரன்ஸ் மாஸ்டரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஏனெனில் அவர் நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார், ஆனால் ஒரு நம்பமுடியாத உயிரோட்டமான, கனிவான மற்றும் அற்புதமான மனிதர். உங்களின் கருணை, அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் எனது பிறந்தநாளுக்கான அனைத்து பரிசுகளுக்கும் நன்றி. உங்களுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











