கன்னத்தில் அறை வாங்கிய கங்கனா; எம்.பியாக கோவைக்கு முதல் பயணம்; எல்லாம் இதுக்குதான்!
18வது மக்களவைத் தேர்தல் முடிந்ததும் யார் ஆட்சி அமைக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவருக்கும் ஒரு புறம் இருந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிந்த சில தினங்களில் ஊடகங்களில் தீயாக பரவிய விஷயம், நடிகையும் நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரி கங்கனாவை கன்னத்தில் கடுமையாக அறைந்தார்.
இந்த விஷயம் நாடு முழுவதும் காட்டுத்தீயைப் போல் பரவியது. கங்கனாவை அறைந்ததற்கான காரணம் என அந்த பாதுகாப்பு படை அதிகாரி கூறியது, " விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தான் தீவரவாதிகளின் போராட்டம் என கங்கனா கூறியதுதான் எனக் கூறியுள்ளார். மேலும் அந்த போராட்டத்தில் தனது தாயும் கலந்து கொண்டதாகவும், அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோர் ரூபாய் 100க்கும் 200க்கும் அமர்ந்திருக்கின்றனர் எனவும் கூறியதால்தான் அறைந்தேன் எனக் கூறினார்.

கன்னத்தில் அறை வாங்கிய கங்கனா: இந்நிலையில், தான் கன்னதில் அறை வாங்கப்பட்டதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்த கங்கனா அங்கிருந்து அமைதியாக கிளம்பினார். கங்கனாவை அறைந்த பாதுகாப்பு படை பெண் அதிகாரிக்கு நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு அமைப்பினர் வாழ்த்து தெரிவித்தும் உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம் எனவும் கூறி அறிக்கைகள் விட்டவண்ணம் இருந்தனர். இந்நிலையில், கங்கனா தனது சமூகவலைதளப் பக்கத்தில் திருடனுக்கும் கொலைகாரனுக்கும் திருடவும் கொலை செய்யவும் ஒரு காரணம் இருக்கும் என தான் கன்னத்தில் அடிவாங்கப்பட்டது தொடர்பாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

மறையாத வடு: இதுமட்டும் இல்லாமல், பிரதமர் பதவியேற்பின் போது கங்கனா கலந்து கொண்டபோது கூட கங்கனா ரானவத்தின் கன்னத்தில் அடிவாங்கிய காயம் இருந்ததாகவும், பாதுகாப்பு படை அதிகாரியின் விரல்கள் கங்கனாவின் கன்னத்தில் பதிந்துவிட்டதாகவும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் வெளியான புகைப்படங்கள் போலியானது என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

கோவைக்கு வருகை: இந்நிலையில், தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட நடிகையும் மண்டி தொகுதியின் மக்களவை உறுப்பினர் கங்கனா ரானாவத் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்துள்ளார். மேலும் அங்கு கடவுள் தரிசனம் மேற்கொண்ட நடிகை கங்கனா அதன் பின்னர் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு எனப்படும் ஜக்கி வாசுதேவிடமும் ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே சிவராத்திரி நாட்களில் கங்கனா ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்து இரவு முழுவதும் உறங்காமல் சிவனை வழிபடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட நடிகை சமந்தா இங்கு வருகை தந்து தியானத்தில் ஈடுபட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











