அவரை மாதிரிலாம் என்னால் முடியாது - உண்மையை ஒத்துக்கொண்ட கங்கனா ரணாவத்
மும்பை: ஜோதிகாவின் வீடியோவை மேற்கோள் காட்டி அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது என கங்கனா ரணாவத் ட்வீட் செய்துள்ளார்.
பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வித்யாசாகர் இசையில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டாகி ரஜினிக்கு கம்பேக்காக அமைந்தது.

800 நாள்களை கடந்த சந்திரமுகி
பாபா படம் கொடுத்த மரண அடிக்கு பிறகு ரஜினிக்கு உடனடியாக ஒரு ஹிட் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் இயக்குநர் பி.வாசு கன்னடத்தில் வெளியான ஆப்தமித்ரா என்ற படத்தின் ரீமேக் கதையை ரஜினியிடம் சொன்னார். பேய் படமாக இருந்தாலும் சில சுவாரசியமான விஷயங்கள் இருந்ததால் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் ரஜினி. படமும் வெளியாகி சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்ததால் 800 நாள்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

ஜோதிகாவின் அசத்தல் நடிப்பு
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருந்தாலும் அனைவரையும் கவர்ந்தது நிச்சயம் ஜோதிகாதான். கங்கா, சந்திரமுகி என இரண்டு கதாபாத்திரங்களிலும் அவர் காட்டிய வேரியேஷன்கள் பலரையும் பிரமிக்க வைத்தது. குறிப்பாக சந்திரமுகியாக மாறும்போதும், க்ளைமேக்ஸ் காட்சியிலும், ரா ரா பாடலிலும் ஜோதிகாவின் நடிப்பை பார்த்த பலரும் விருது உறுதி என ஆரூடம் கூறினர். ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்தக் கதாபாத்திரத்தில் முதலில் சிம்ரனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

காமெடியில் அதகளம் செய்த வடிவேலு
ஜோதிகாவின் நடிப்பு மட்டுமின்றி படத்துக்கு இன்னொரு ப்ளஸ்ஸாக அமைந்தது வடிவேலுவின் காமெடி. இந்தப் படத்தில் ரஜினியுடன் வடிவேலு செய்த காமெடி இன்றுவரை பலரது ஃபேவரைட். அதிலும் இந்தப் படம் வந்தபோது வடிவேலு உச்சக்கட்டத்தில் இருந்ததால் ரஜினியே பி.வாசுவிடம் முதலில் வடிவேலுவின் காஷ்ஷீட்டை வாங்கிவிடுங்கள் என கூறியது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி 2 உருவாகிறது
இப்படி பல சிறப்பான விஷயங்களை கொண்டிருக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது. பி.வாசு இயக்கும் இந்தப் படத்தில் லாரன்ஸ், வடிவேலு உள்ளிடோர் நடிக்கின்றனர். சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஜோதிகா மாதிரி நடிக்க முடியாது - ஒத்துக்கொண்ட கங்கனா
சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார் என தெரியவந்ததும் ஜோதிகாவின் நடிப்பை அவர் ஈடு செய்வாரா என ரசிகர்கள் முணுமுணுத்தனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 2019ஆம ஆண்டு ஜோதிகா பேசும் வீடியோவை பகிர்ந்து, "இது எனக்கு ஊக்கமளிக்கிறது. சந்திரமுகி படத்தில் ஜோதிகா வழங்கிய மிகச்சிறந்த நடிப்பை நாள்தோறும் பார்த்துவருகிறேன்.
ஏனென்றால் சந்திரமுகி 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை நாங்கள் படமாக்கிவருகிறோம். படத்தின் முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பை அளிக்கக்கூடியது. அவருடைய நடிப்பை ஈடு செய்வது சாத்தியமற்றது" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











