அந்த பளிச் சிரிப்பும், 'கஸ்' என்று உற்சாகமாக கூப்பிடுவதும் இனி இல்லை.. நடிகை கஸ்தூரி உருக்கம்!
சென்னை: தன்னை கஸ் என்று உற்சாகமாக கூப்பிடுவது இனி இருக்காது என நடிகர் விவேக் மறைவு குறித்து நடிகை கஸ்தூரி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்தின் இடதுபுற குழாயில் 100% அடைப்பு இருந்ததால் ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

உலுக்கிய மரணம்
இருப்பினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்தது. விவேக்கின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.

பிரபலங்கள் அஞ்சலி
ரசிகர்களும் சக சினிமா கலைஞர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, மயில்சாமி, எம்எஸ் பாஸ்கர், பாண்டியராஜ், சூரி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இப்படி ஆயிட்டிங்களே..
பிரபலங்கள் பலரும் அவருடன் பணியாற்றிய அனுபவத்தையும் பழகிய அனுபவத்தையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எப்படி இருந்த நீங்க இப்பிடி ஆயிட்டிங்களே ! எங்களை விட்டுட்டு போயிட்டிங்களே !! சிரிக்க சிரிக்க சிந்திக்க வச்சவரு இப்போ சிந்திக்கவே முடியாத சோகத்துல தள்ளிட்டீங்களே!

அந்த பளிச் சிரிப்பு..
இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் என்று சொன்னவரே இப்படி சடலமா படுத்திருக்கீங்களே! நீங்க இல்லைங்கறதை ஜீரணிக்கவே முடியலை. அந்த பளிச் சிரிப்பும், 'கஸ்' என்று உற்சாகமாக கூப்பிடுவதும் இனி இல்லை ! ஆசை ஆசையாக இசையை அலசும் அன்பு நண்பர் இனி இல்லை! அழகாய் அனைவரையும் கவரும் வண்ணம் எப்படி பேசவேண்டும் என்பதற்கு இலக்கணமாய் திகழ்ந்த அன்பு உள்ளம் இல்லை !

இருண்ட நாள்
அவநம்பிக்கையில் உறைந்திருக்கிறேன்.. விவேக் சார் இல்லை என்று ஜீரணிக்க முடியாது. இது நம் அனைவருக்கும் இருண்ட நாள். நான் ஒரு மதிப்புமிக்க நண்பனை இழந்துவிட்டேன். தமிழ் சினிமா பிடித்த மகனை இழந்துள்ளது. நாடு ஒரு அற்புதமான முன்மாதிரியை இழந்துள்ளது.
மரம் நடுவோம்
நடிகர் விவேக்கின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சிந்தனையாளர் விவேக்கின் எண்ணங்கள் இனி நமக்கு கிட்டா. ஆனால் சமூக இயற்கை ஆர்வலர் விவேக்கின் கனவை நாம் மெய்ப்பட செய்ய முடியும். மரம் நடுவோம்.மக்களின் கலைஞன் சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ Dr விவேக்கின் ஆன்மா சாந்தியடைய நாம் ஒவ்வொருவரும் செய்ய கூடிய எளிதான நன்றிக்கடன்.
மரம் நடுவோம்.
ஒன்றே ஒன்றாவது
ஒரு மரக்கன்றாவது
சென்றுவிட்டவர் பெயர் நிலைக்க
இன்றோடில்லாமல் என்றும் நினைக்க
நன்றே செய்வோம். நன்மரம் நடுவோம்.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











