Kayadu Lohar: அதை நம்பாதீங்க.. கயாடு லோஹர் இப்படி ஒரு போஸ்ட் போட என்ன காரணம்?
சென்னை: நடிகை கயாடு லோஹர் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, கரூரில் நடைபெற்ற, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இப்படி இருக்கையில் இந்த சம்பவம் தொடர்பாக கயாடு லோஹர் கருத்து தெரிவித்ததாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் அந்த பதிவுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, " எனது பெயரில் பதிவுகள் பரப்பப்படும் டிவிட்டர் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை, மேலும் அதில் வெளியிடப்பட்ட கருத்துகள் என்னுடையவை அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்பதையும், எனது பெயரில் பரப்பப்படும் கதை தவறானது என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறேன். தயவுசெய்து இந்தத் தவறான தகவலை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். மீண்டும் ஒருமுறை, துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுடன் எனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இழப்பீடு: கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இப்படி இருக்கையில் இந்த துயரச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது துயரத்தையும் இரங்கலையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ரூபாய் 20 லட்சமும், தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 10 லட்சமும், மத்திய அரசு சார்பில் ரூபாய் 2 லட்சமும் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











