சின்னத்திரை நடிகர்கள் விருது விழாவில் கீழே விழுந்த குஷ்பு! பரிதாபப்பட்டவர்கள் முன் நடனமாடி கெத்து!
கேரளா: தமிழ் சினிமாவில் 90 மற்றும் 2000களில் முன்னணி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை குஷ்பு. இவரது நடிப்பில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. தமிழ் நாட்டில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது நடிகை குஷ்புவுக்குத்தான் முதன் முதலில் கோவில் கட்டப்பட்டது. அதேபோல் அவரது தோற்றத்தை சிலாகிக்கும் வகையில் குஷ்பு இட்லி என்றெல்லாம் இட்லிக்கு பெயர் வைத்து இன்றும் வியாபாரம் நடத்தும் கடைகள் இருக்கத்தான் செய்கின்றது. நடிகை குஷ்பு கேரளாவில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அவர் கால் தவறி கீழே விழுந்தார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

குஷ்பு, முன்னணி கதாநாயகியாக இருந்த காலகட்டத்தில் நாட்டாமை, அண்ணாமலை, சின்னதம்பி, மகளிர்க்காக உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். பெரியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மணியம்மையாக நடித்திருந்தார். இவர் இயக்குநர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கேரள சினிமாவில் ஹேமா கமிட்டி விவகாரம் பூதாகரமானபோது, அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, "அப்போது எல்லாம் இப்போது மாதிரி கேரவன் எல்லாம் கிடையாது. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு தயாராக உடைகள் மாற்ற வேண்டும் என்றால் நம்முடன் இரண்டு லைட் மேன்கள் மற்றும் இரண்டு ஒப்பனைக் கலைஞர்களை அனுப்புவார்கள். அவர்கள் நான்கு பேரும் கையில் ஒரு பெரிய துணி வைத்து என்னை மறைத்துக் கொள்வார்கள். நான் உள்ளே ஆடைகளை மாற்றுவேன். என்னைச் சுற்றி நாலு பேர் இருந்தாலும் எனக்கு பயம் இல்லை. காரணம் அவர்கள் ஏற்படுத்திய நம்பிக்கை. அப்போது செல்போன் கிடையாது என்பதால் பயம் இல்லை. ஆனால் இப்போது பயம் இருக்கின்றது.

அம்பாசிட்டர் காரில் வைத்து: இதுமட்டும் இல்லாமல், நான் அம்பாசிட்டர் காருக்குள் அமர்ந்து எல்லாம் உடை மாற்றி இருக்கின்றேன். அம்பாசிட்டர் கார் முற்றிலும் துணி போட்டு மூடப்பட்டு இருக்கும். காருக்கு வெளியே டிரைவர் நின்றுகொண்டு இருப்பார். அவர் அந்த வழியாக வருபவர்களை அங்கு வரவேண்டாம் என பார்த்துக் கொள்வார். இந்த நம்பிக்கைதான் நிம்மதியாக பணியாற்ற உதவியது. இன்றைக்கு கேரவன்கள் வந்திருந்தாலும், முந்தைய காலத்தில் இதுபோன்ற சூழலை சந்தித்ததால்தான் இன்றைக்கு கேரவன் வந்துள்ளது" என பேசினார்.

கீழே விழுந்த குஷ்பு: இந்நிலையில், கேரளாவில் தனியார் டிவி நடத்திய சின்னத்திரை நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை குஷ்புவை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடனமாடும்படி கேட்டுக் கொண்டார். குஷ்புவும் அவரது கோரிக்கையை ஏற்று நடனமாடினார். ஏற்கனவே மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் குஷ்பு நடனம் ஆடும்போது கால் தவறி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி, ஆசுவாசப்படுத்த முயற்சித்தனர். இதனைப் பார்த்த சின்னத்திரை பிரபலங்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள்.

தன்னம்பிக்கை: கீழே விழுந்த குஷ்பு எழுந்து நின்றதும், " அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு மூட்டு வலி பிரச்னை உள்ளது. அதன் காரணமாகத்தான் விழுந்துவிட்டேன். என்னால் இந்த நிகழ்ச்சி தடைபட வேண்டாம், பாடலை ஒலிபரப்புங்கள் நான் ஆடுகின்றேன்" எனக் கூறினார். உடனே பாடலும் ஒலிபரப்பட்டது. குஷ்பு நடனமாடி அசத்தினார். இதனால் அங்கிருந்த சின்னத்திரை நடிகர்கள் அனைவரும் எழுந்து நின்று தலை வணங்கினர். மேலும் அரங்கம் அதிரும் அளவிற்கு கரகோஷம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் தான் விழுந்த இடத்திலேயே எழுந்து ஆடிய குஷ்புவின் தன்னம்பிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றார்.



Click it and Unblock the Notifications











