குட்டி பத்மினி: 10 வயசுல எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சு.. பாலியல் புகார் குறித்து குட்டி பத்மினி ஓபன்!
சென்னை: கேரள திரையுலகை கடந்த சில தினங்களாக ஆட்டிப்படைத்து வருகிறது ஹேமா கமிட்டி அறிக்கை. கடந்த 2019லேயே தன்னுடைய அறிக்கையை ஹேமா கமிட்டி வெளியிட்ட நிலையில் 5 ஆண்டுகளை கடந்து பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான இதன் அறிக்கை தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியாகி உள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை பல்வேறு அதிர்ச்சிகளை, கண்டனங்களை கேரளாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்போது பல காலகட்டங்களில் நடந்த பல விஷயங்கள் வெளியாகி வருகின்றன.. பாலிவுட்டிலும் பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி இந்த விஷயத்தில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை: திரைத் துறையில் காலங்காலமாக பாலியல் புகார்கள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவை அப்படியே பல்வேறு பஞ்சாயத்துகள் மூலம் அமுக்கி வைக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். திரைத்துறையில் மட்டுமில்லாமல் காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பாலியல் புகார்கள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ள நிலையிலும் திரை துறையில் இது மிகவும் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சினிமாவில் நடிப்பதன் மூலம் மிக எளிதாக பெயரையும் புகழையும் பணத்தையும் பெற்றுவிட முடியும்.
சினிமாவில் சாதிக்கும் கனவு: தன்னுடைய ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு சினிமாமூலம் கிடைத்ததாக பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய பாடல்மூலம் தெரிவித்திருப்பார். அந்த வகையில் சினிமாவில் ஆரம்பத்தில் சற்றே சிரமப்பட்டால் விரைவிலேயே வாழ்க்கையில் செட்டிலாகவும் முடியும். இதற்கு வாழும் உதாரணங்கள் பலர் உள்ளனர். இந்த காரணங்களால் சினிமாவில் ஒரு படத்திலாவது தலையைக் காட்டி தன்னை நிரூபித்து விட வேண்டும் என்ற ஆசை, வெறி நடிகர்கள், நடிகைகள் என அனைத்து தரப்பினரிடையேயும் உள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் அவர்களை வளர்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் தவறாக பயன்படுத்துகின்றனர்.
ஹேமா கமிட்டி அறிக்கை: ஒரு சிலர் இதை அப்படியே எளிதாக கடந்து செல்லும் நிலையில் ஒரு சிலரால் இதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இதன் ஒரு பகுதியாகவே தற்போது கேரளா திரையுலகம் பல்வேறு பாலியல் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட நிலையில் அங்கு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதையொட்டி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கை கடந்த 2019ம் ஆண்டிலேயே தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த அறிக்கையை வெளியிட தடை இருந்தது. இதையடுத்து அந்த அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.
குட்டி பத்மினி ஓபன்: இந்த விஷயத்தில் பல்வேறு தரப்பினரும் தங்களது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் கண்டனங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினியும் இந்த விஷயத்தில் தற்போது தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசும் தன்மை கொண்ட குட்டி பத்மினி மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து இருந்து வருவதாக கூறியுள்ளார். ஆனால் மலையாள திரையுலகில் கம்பேர் செய்யும் போது தமிழில் இத்தகைய செயல்கள் மிகவும் குறைவு தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
10 வயதில் பாலியல் துன்புறுத்தல்: இந்த விஷயத்தில் ஹீரோக்கள் நேரடியாக ஈடுபட மாட்டார்கள் என்பதை தெளிவுப்படுத்தியுள்ள குட்டி பத்மினி, தங்களது வேலைகள் ஆக வேண்டும் என்பதற்காக ஏஜெண்ட்களே மிகவும் முக்கியமாக இதில் செயல்பட்டு வருவதாகவும் நடிகைகளை ஏமாற்றி, பயமுறுத்தி பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வருவதாகவும் கூறியுள்ளார். நடிகை பார்வதி, ஸ்ரீரெட்டி, சின்மயி உள்ளிட்டவர்கள் இந்த விஷயத்தில் பேசியதால் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் குட்டி பத்மினி கூறியுள்ளார். தான் 10 வயதிலேயே இந்த விஷயத்தை எதிர்கொண்டதாகவும் தன்னுடைய அம்மா கேள்வி கேட்டதால் தான் அந்தப் படத்திலிருந்து தூக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











