அடித்து கொடுமைப்படுத்திய கணவர்.. யாருக்குமே தெரியாத சுஜாதாவின் இறப்பு.. குட்டி பத்மினி சொன்ன தகவல்!
சென்னை: கண்ணிலே என்ன உண்டு.. கண்கள்தான் அறியும்.. கல்லிலே ஈரம் உண்டு கண்கள்தான் அறியும் என்ற பாடலுக்கு ஏற்றார் போல. மனதில் பல கவலைகளோடு வாழ்ந்து மறைந்தவர் தான் நடிகை சுஜாதா. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இந்த நடிகை தனது கணவரால் பல கொடுமைகளை சந்தித்தார். நடிகை சுஜாதாவின் கணவர், அவரை பெல்டால் அடித்து கொடுமைப்படுத்தினார் என்று நடிகை குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சினிமா தயாரிப்பாளுரும், நடிகையுமான குட்டி பத்மினி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். குழந்தையும் தெய்வமும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து, சிறுவயதிலேயே தேசிய விருதை பெற்றார். குட்டி பத்மினி சினிமா துறையினர் சம்பந்தமான சில விஷயங்களை வெளிப்படையாக தனது KPTV youtube யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.

நடிகை சுஜாதா: அந்த வகையில் நடிகை சுஜாதாவின் கசப்பான வாழ்க்கையை பற்றி பேசி உள்ளார். அதில், பலர் சுஜாதாவை பற்றி பேசும் படி கேட்டுக்கொண்டதால், நான் அவரை பற்றி இந்த வீடியோவில் பேசுகிறேன் என்றார். நானும் சிவகுமார் அவர்களும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது தான், பாலச்சந்தர் நடிகை சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின், அவர்கள் படத்தின் மூலம் அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அழகான நடிகை: சுஜாதா அவர்களை பார்க்கும் போதே ரொம்ப மென்மையாகவும், அழகு பதுமையாகவும் இருந்தார். அவர்களுடையே கண், மான் கண்போல அவ்வளவு அழகாக இருக்கும். சுஜாதா சினிமாவில் நடித்த வரை அவருக்கு எந்த ஒரு கெட்ட பெயரும் வந்ததே இல்லை. அவருடைய நடிப்பாகட்டும், மற்றவர்களிடம் பேசுவதாக இருந்தாலும், பொது இடத்திலோ, பொது நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் சுஜாதா கண்ணியமாக நடந்து கொண்டார். மக்கள் சுஜாதாவை தனது குடும்பத்தில் ஒரு பெண்ணாக பார்த்தனர்.
கொடுமைப்படுத்திய நடிகர்: பல வெற்றிப்படங்களை கொடுத்து திறமையான நடிகை என பெயர் எடுத்தாலும், சுஜாதாவிற்கு நடிக்க பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது. அப்போது ஜெயகர் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்கலாம் என்று சொன்ன அவரது கணவர், அதன் பின் இப்படி நடி, அப்படி நடி என்று பல கண்டிஷன் போட்டு சுஜாதாவை கொடுமைப்படுத்தினார்.
எப்படி காதலித்தார்: ஜெயகர் ஆண் ஆதிக்க மனம் கொண்டவர், கர்வம், தலைக்கனம் பிடித்தவர் போல நடந்து கொள்வார் அவரை எப்படி சுஜாதா காதலித்தார்கள் என்பது தான் பலருக்கும் புரியாத ஒன்றாக இருந்தது. சுஜாதா தனது கணவருடன் எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் ஒரு வீட்டின் கீழ் பகுதியில் ஊறுகாய் கம்பெனி நடத்திக்கொண்டு மேல் வீட்டில் குடியிருந்தார்கள். ஒரு நாள் சுஜாதாவை அவரது கணவர் ஜெயகர் பெல்டால் அடிக்கும் சத்தமும், சுஜாதா வலி தாங்கமுடியாமல் அழும் சத்தமும் எங்களுக்கு கேட்டது. நானும் அம்மாவும் ஓடிச்சென்று தடுத்தோம் அப்போதும் சுஜாதா பெருமையாக எதையும் பேசாமல் அழுதுக்கொண்டே இருந்தார். அந்த காட்சியை என்னால் இன்னும் மறக்கவே முடியவில்லை.
யாருக்குமே தெரியாது: அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த வீட்டை விட்டு சுஜாதா காலி செய்து வேறு எங்கோ சென்றுவிட்டார்கள். எங்கு போனார்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. அவர் இறந்த செய்திக்கூட யாருக்கும் தெரியவில்லை. விஷயம் தெரிந்த ஒன்றிரண்டு நடிகர்கள் மட்டும் தான் சுஜாதாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்கள் என்று நடிகை குட்டி பத்மினி தனது வீடியோவில் கண்கலங்கி பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











