அவர் என்னிடம் பிரபோஸ் செஞ்சது உண்மைதான்.. ரஜினி சிறந்த மனிதர்.. நடிகை லதா சொன்ன விஷயம்!
சென்னை: நடிகை லதா 70 மற்றும் 80களின் காலகட்டங்களில் எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ள லதா பள்ளி மாணவியாக இருந்தபோதே சினிமாவில் அறிமுகம் ஆனவர்.
முதல் படத்திலேயே எம்ஜிஆருடன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் லதா. எம்ஜிஆர் லதா என்றே இவரை ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது சீரியல்களில் நடித்துவரும் லதா, சமீபத்தில் ரசிகர்களை சந்தித்ததாகவும் அவர்கள் தன்னை எம்ஜிஆர் லதா என்றே அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

நடிகை லதா: நடிகை லதா 70கள் மற்றும் 80களின் காலகட்டத்தில் சினிமாவில் எம்ஜிஆர் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழில் முதல் படத்திலேயே எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்து ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நாகேஷ்வரராவ், என்டிஆர், பிரேம் நசீர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழிலும் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் லதா.
எம்ஜிஆர் லதா: நடிகர் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தான் அறிமுகமான நிலையில், தன்னிடம் 5 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்துள்ளார் லதா. எம்ஜிஆர் தன்னுடைய ஆசான் என்று தெரிவித்துள்ள லதா, இந்த ஒப்பந்தத்தால் ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கைநழுவியதாகவும் ஆனால் தான் அதற்காக கவலைப்படவில்லை என்றும் தன்னுடைய தற்போதைய பேட்டியில் கூறியுள்ளார். எம்ஜிஆரிடம் கேட்டே தான் மற்ற மொழிப் படங்களில் நடித்ததாகவும் லதா தெரிவித்துள்ளார். எம்ஜிஆரை போலவே அவரது மனைவி ஜானகி அம்மாவும் தன்னிடம் மிகவும் நெருக்கமாக பழகுவார் என்றும் லதா தெரிவித்துள்ளார்.
ரஜினியுடன் கிசுகிசு: எம்ஜிஆர் வீட்டிற்கு சென்றால், எதற்காகவும் காத்திருக்காமல் நேரடியாக எம்ஜிஆரை சந்திப்பேன் என்றும் ஜானகி அம்மாவும் தன்னை பார்த்தவுடன் உடனடியாக மேலே சென்று எம்ஜிஆரை சந்திக்க அனுமதிப்பார் என்றும் லதா கூறியுள்ளார். இதனிடையே எந்த நடிகருடனும் தன்னை இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகாத நிலையில் ரஜினியுடன் மட்டும் தன்னை இணைத்து இத்தகைய கிசுகிசுக்கள் வெளியானதாகவும் ஆனால் ரஜினி தனக்கு மிகப்பெரிய நண்பர் என்றும் மிகச்சிறந்த மனிதர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பெரிய அளவிற்கு வந்த நிலையிலும் அவர் மிகவும் எளிமையாகவே இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரபோஸ் செய்த மலையாள நடிகர்: இதனிடையே மலையாள நடிகர் ஜெயன் லவ் இன் சிங்கப்பூர் படத்தில் இணைந்து நடித்தபோது, தன்னை காதலிப்பதாக தன்னை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும் லதா கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து தான் யோசிப்பதற்கு முன்னதாகவே அவர் விபத்தில் மரணமடைந்தது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் லதா தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனிடையே முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுடனும் தனக்கு மிகச்சிறப்பான பழக்கம் இருந்ததாகவும் இருவரும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளை பார்க்க செல்வோம் என்றும் லதா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











