Exclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்!
தோனி கபடிக்குழு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகை லீமா.
Recommended Video

சென்னை: படையப்பா நீலாம்பரியை போன்ற ஒரு வேடத்தில் நடிப்பது தான் தனது வாழ்நாள் லட்சியம் எனக் கூறுகிறார் நடிகை லீமா.
மதராஸப்பட்டணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவருக்கு தற்போது ஹீரோயின் அந்தஸ்து கிடைத்துள்ளது.
தோனி கபடிக்குழு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் லீமா. படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்தவரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன்.

ஆர்யா தங்கை
"மதராஸப்பட்டணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்த எனக்கு இப்போது ஹீரோயின் புரோமோஷன் கிடைத்துள்ளது. தோனி கபடிக்குழு ஒரு வித்தியாசமான படம். கிரிக்கெட்டும் இருக்கும் கபடியும் இருக்கும். படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.

நல்ல கதாபாத்திரம்
பொதுவாக படங்களில் வரும் பப்ளி க்யூட் ஹீரோயினாக மட்டுமில்லாமல், ஒரு பொறுப்பான தைரியமான நாயகி பாத்திரம் எனக்கு. படம் நன்றாக வந்துள்ளது. பாடல்கள் எல்லாமே சூப்பரா இருக்கிறது. எல்லோரும் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

நரை படத்திலும்...
தோனி கபடிக்குழு படத்தை அடுத்து, நரை எனும் படத்தில் நடித்துள்ளேன். அதுவும் ஒரு வித்தியாசமான படம். முதியவர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள. அதிலும் எனக்கு அழகான கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

வரலட்சுமி தான் ரோல்மாடல்
எனக்கு ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வரலட்சுமி தான் என் ரோல் மாடல். அவரை போல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
வில்லியாக நடிக்க ஆசை
வில்லியாகக்கூட நடிக்க நான் தயாராக இருக்கிறேன். படையப்பாக நீலாம்பரி கதாபாத்திரம் தான் எனது லட்சிய வேடம். ஆனால் எனது முகம் அதுக்கு செட்டாகாது என சொல்லிவிட்டார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழித்தாவது அதுக்கு நான் செட்டாவேனா என பார்க்க வேண்டும். நிச்சயம் அது மாதிரி ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும்.

சினிமாவை விட்டுத்தர மாட்டேன்
நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து சினிமாக்குள் வந்தவள். இங்கிருக்கும் ஒரு சிலரால் தான் காஸ்டிங் கவுச் போன்ற விஷயங்கள் நடக்கிறது. அவர்களை வைத்து ஒட்டுமொத்த துறையையும் குற்றம் சொல்லக்கூடாது. நான் என்றுமே சினிமாவை விட்டுத்தர மாட்டேன்", என உறுதியாக கூறுகிறார் லீமா.


Click it and Unblock the Notifications











