பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுமைப்படுத்தினார்கள்.. கமலும் கண்டிக்கவில்லை: மதுமிதா போலீஸில் பரபர புகார்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைபடுத்தியதாக நடிகை மதுமிதா போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகையான மதுமிதா பங்கேற்றார். மக்களிடையே நல்ல ஆதரவு இருந்த நிலையில் மதுமிதா ஃபைனல்ஸ்க்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனை மற்றும் சக போட்டியாளர்கள் கொடுத்த மன உளைச்சலால் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. காவிரி பிரச்சனை குறித்து பேசியதால், ஷெரின், கவின், லாஸ்லியா ஆகியோர் அவரை தமிழக மக்களுக்கு உயிரை கொடு என தற்கொலைக்கு தூண்டியதாக தகவல் வெளியானது.

வெளியேற்றப்பட்ட மது
இதனால் கையை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் மதுமிதா. பிக்பாஸின் முக்கியமான விதியை மீறியதாக கூறி அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மதுமிதா மீது புகார்
இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் மதுமிதா மீது விஜய் டிவி தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதில் மதுமிதா தனது சம்பள பாக்கியை கொடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதாக கூறப்பட்டது.

முற்றிலும் பொய்யானது
தன் மீதான புகாரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, தன் மீதான புகார் முற்றிலும் பொய்யானது என்று கூறினார். தனக்கு தரவேண்டிய மீதித்தொகையை கொடுக்கும்படி கேட்டேன். நிர்வாகமும் தருவதாக ஒப்புக்கொண்டது, பிறகு ஏன் என் மீது புகார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றார்.

மதுமிதா புகார்
மேலும் இந்த பிரச்சனையை விஜய் டிவி நிர்வாகமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் சாரும் பேசி தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப் படுத்தியதாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார்.

கொடுமைப்படுத்தினார்கள்
மேலும் சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதை நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் கண்டிக்கவில்லை என்றும் மதுமிதா தபால் மூலம் அளித்த தனது புகாரில் தெரிவித்துள்ளார். தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் மதுமிதா தனது புகாரில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











